வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (12:16 IST)

மரண தண்டனையை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது: கனிமொழி

மரண தண்டனையை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்று மாநிலங்கள் அவை உறுப்பினரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி கூறியுள்ளார்.
 
இது குறித்து கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
நமது நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நீண்ட சட்ட நடைமுறைகள் இருக்கின்றன என்றாலும், சொந்த குடிமக்களின் உயிரைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற ஏற்கத்தகாத மரண தண்டனைகள் இன்னமும் நிறைவேற்றப்படுவது வேதனை அளிக்கிறது.
 
மரண தண்டனையை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டில் மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மரண தண்டனையை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்ய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் வரை கருணை மனுக்கள் மீது முடிவுக்கு எடுப்பதை குடியரசு தலைவர் தவிர்க்க வேண்டும்.
 
150 நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. ஐ.நாவும் இதனை வலியுறுத்தி வருகிறது. மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக நாடாளுமன்ற மேல்சபையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கனிமொழி கூறியுள்ளார்.
 
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நேற்று தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் கனிமொழி மரண தண்டனைக்கு எதிராக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.