வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 25 ஜூலை 2014 (13:08 IST)

தெலங்கானா ரயில்–பேருந்து மோதல் விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; 11 குழந்தைகள் கவலைக்கிடம்

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி பேருந்து மீது ரயில் மோதியதில் 16 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியான சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேடக் மாவட்டம் சேகுண்டா மண்டலம் துருவான் பகுதியில் காகதியா டெக்னோ என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களை பள்ளிக்கு அழைத்து வர 3 பேருந்துகள் உள்ளது. 2 பேருந்துகள் வேறு கிராமங்களுக்கு சென்றுவிட்டது. எஞ்சிய ஒரு பேருந்தின் ஓட்டுநர் பணிக்கு வராததால் பிக்ஷபதி (50) என்பவரை பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்தது. பிக்ஷபதி டிராக்டர் ஓட்டுநர் என கூறப்படுகிறது.
 
மசாய்பேட்டை அருகே ஆள் இல்லாத லெவல் கிராசிங்கை கடந்த போது நாந்கேட்–ஹைதராபாத் பயணிகள் ரயில் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தை இழுத்துச் சென்ற ரயில் அருகில் உள்ள சுடுகாட்டில் தூக்கி வீசியது. இதில் ஓட்டுநர் பிக்ஷபதி, கிளீனர் தனுஷ்கோடி மற்றும் 16 குழந்தைகள் பலியானார்கள். காயம் அடைந்த 20 குழந்தைகள் ஹைதராபாத் யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் 9 குழந்தைகள் லேசான காயத்துடன் தப்பி விட்டனர். 11 குழந்தைகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 11 பேரில் 4 பேர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
 
பல குழந்தைகளின் கை, கால் முறிந்து விட்டது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிக ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகமும், தெலங்கானா அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

"இனி ஒரு உயிரையும் இழக்க விடமாட்டோம்" என்ற முனைப்பில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருமகனும் அமைச்சருமான ஹரிஷ் ராவ் தெரிவித்தார்.
 
குழந்தைகளின் உயிரை காப்பாற்ற 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 150 டாக்டர்கள் 100 செவிலியர்கள் உள்ளனர். இவர்கள் காயம் அடைந்த குழந்தைகளுக்கு அனைத்து பரிசோதனைகளையும் செய்து வருகிறார்கள்.
 
மீட்பு பணியில் தெலங்கானா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நேரடியாக களம் இறங்கி செயல்பட்டனர். காயம் அடைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆக்ஸிஜன் வசதி கொண்ட 10 ஆம்புலன்ஸ் வண்டிகள், 4 சாதாரண ஆம்புலன்ஸ்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டது.
 
பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
 
விபத்து நடந்த இடத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சென்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பெற்றோர்கள் தகறி அழுததை கண்டு அவர் கண் கலங்கினார்.
 
விபத்துக்கு பள்ளிக் கூட பேருந்து டிரைவரின் அலட்சியமும், கவனக்குறைவுமே காரணம் என தெரிய வந்துள்ளது. பேருந்து ஓட்டுநர் பிக்ஷபதி செல்போனில் பாட்டு கேட்டபடி பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால் ரயிலில் ஹாரன் ஒலி அவருக்கு கேட்கவில்லை.
 
ரயில் வருகிறது என்று குழந்தைகள் கூச்சல் போட்டதை கூட அலட்சியப்படுத்தி என்ன என்று சைகையில் கேட்டு உள்ளார். தண்டவாளத்தில் ஏறிய பின்னர்தான் ரயில் வருவதை கவனித்துள்ளார். அப்போது ரயிலுக்கும், பேருந்துக்கும் இடைவெளி 30 அடி தூரம்தான் இருந்தது.
 
என்ஜின் ஓட்டுநர் ‘‘உடனடி பிரேக் போட்டு ரயிலை நிறுத்திய போதிலும் கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து மீது மோதி அதனை இழுத்துக் கொண்டே 500 மீட்டர் தூரம் கடந்து ரயில் நின்றது.
 
இது குறித்து ரயில் என்ஜின் ஓட்டுநர் சத்திய நாராயணா கூறும் போது, "100 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் ரயிலை பிரேக் போட்டு நிறுத்துவது எளிதான காரியம் அல்ல. அவ்வாறு நிறுத்தினாலும் 500 மீட்டர் தூரத்தில்தான் ரயில் நிற்கும். பேருந்து ஓட்டுநர் 30 அடி தூரத்தில் வந்த போதுதான் ரயிலை கவனித்து உள்ளார். நான் எவ்வளவோ சிரமப்பட்டு ரயிலை நிறுத்தினேன். திடீர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தும் போது பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழந்து பெரிய விபத்து ஏற்படக்கூட வாய்ப்பு உண்டு" என்றார்.
 
விபத்தையடுத்து பள்ளி நிர்வாகத்தின் உரிமையை ரத்து செய்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகி தலைமறைவாகிவிட்டார். பலியான குழந்தைகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மேடக் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டது.
 
பலியான குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் இரங்கல் கூட்டம் நடத்தி, விடுமுறை விடப்பட்டது. ஆனால் பலியான குழந்தைகள் படித்த காகத்தியா டெக்னோ பள்ளிக்கூடம் மூடப்பட்டு கிடந்தது. 500–க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.