வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (19:00 IST)

தாவூத் இப்ராஹிம் பதுங்கியுள்ள இடம் தெரியவில்லை: மத்திய அரசு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பதுங்கியுள்ள இடம் தெரியவில்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து மக்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹரிபாய் சவுத்ரி, "நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தற்போது எங்கு மறைந்திருக்கிறார் என்பது தெரியவில்லை.
 
அவர் பதுங்கியுள்ள இடம் தெரிந்தபின் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாவூத் இப்ராஹிம் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் உள்ளது.
 
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் தாவூத்துக்கு எதிராக சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கி இருக்கிறது. எனவே தாவூத் இப்ராஹிம் இருப்பிடம் தெரிந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
 
இதுநாள் வரை தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள் உதவியுடன் அங்கு மறைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி லக்னோவில் பேசிய ராஜ்நாத் சிங், "தாவூத் இந்தியாவின் தேடப்படும் தீவிரவாதி. தாவூத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
 
உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாகிஸ்தானுக்கு நிறைய ஆதார திரட்டுகளையும் கொடுத்திருக்கிறோம்" என்றார்.
 
ஆனால், மக்களவையில் இன்று எழுத்துபூர்வ பதிலை தாக்கல் செய்த மத்திய அரசு, தாவூத் இப்ராஹிம் பதுங்கியுள்ள தெரியவில்லை என கூறியிருக்கிறது.