1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (15:36 IST)

”தலித் உயர் கல்வி கற்பதா?”: மாணவியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய ஜாதியவாதிகள்!

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உயர் கல்வி படித்த 17 வயது தலித் மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தலித் மாணவி அங்குள்ள பள்ளியில் மேல்நிலைக் கல்வி தேர்வு எழுதியுள்ளார். இதில் கோபம் அடைந்த உயர் ஜாதியைச் சேர்ந்த நான்கு பேர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.
 
மாணவி தனது குடிசையில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த குற்றவாளிகள் திராஜ் யாதவ், அரவிந்த், தினேஷ் மற்றும் இவர்களின்  தந்தை ராம் பிராவேஷ் யாதவ் ஆகியோர் அவரை வெளியே இழுந்துவந்தனர். மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதில் காயம் அடைந்த மாணவி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
70 சதவீதம் எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி கூறுகையில், அவர்கள் எப்போதும் தேர்வில் தோல்வியே பெற்றுவந்தனர். இந்நிலையில் நான் மேல்நிலைக் கல்வி படித்து வருகின்றேன். சில நாட்களுக்கு முன்னதாக திராஜ் என்னை எப்படியோ போட்டோ எடுத்து விட்டார், என்னை மிரட்ட அவர் முயற்சி செய்தார். இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக எங்களது இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை வெடித்தது என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக மாணவியின் சகோதரரை திராஜ் கடுமையாக தாக்கியுள்ளார். “திராஜ் யாதவ், வயல்வெளியில் என்னுடன் மோதலில் ஈடுபட்டார். எனது சகோதரிக்கு எதிரான மிரட்டலுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திராஜ் கோபம் அடைந்தார். பின்னர் அவருடைய தந்தையிடம் சென்று கூறினார். அவர் என்னை அடித்தார். நாங்கள் தலித் சமூகத்தினர் என்பதால் அவர்கள் எங்களை தண்டிக்க முடிவு செய்தனர்.” என்று மாணவியின் சகோதரர் கூறினார்.
 
காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.