வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 30 மார்ச் 2015 (07:44 IST)

பசு வதையைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்: ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் பசுவதையைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
 
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சமண மதத்தின் சுவதம்பர் பிரிவு தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் பசுக்களை கொல்ல தடை விதித்து சட்டம் கொண்டுவருவதுடன், எருமைகள் வதை தடை சட்டத்தையும் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
பின்னர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:–
 
இந்த நாட்டில் பசுவதையை ஏற்றுக்கொள்ள முடியாது. பசுவதையை தடுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். பசுக்களை கொல்வதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வர கருத்தொற்றுமை ஏற்படுத்த கடுமையாக முயற்சி செய்வோம்.
 
பசுக்களை கொல்வதை தடை செய்ய நாங்கள் உறுதி கொண்டிருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த வகையில் ஏற்கனவே மத்திய பிரதேச மாநில அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா அரசும் சட்டம் கொண்டு வந்திருக்கிறது.
 
மகாராஷ்டிரா அரசு பசுவதை தடை சட்டம் இயற்றி அனுப்பி வைத்தபோது, அதை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு நாங்கள் அனுப்பி வைக்க நேரம் எடுக்கவில்லை. பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அரசுக்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும்.
 
நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அரசு எப்படியெல்லாம் போராடுகிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறியலாம். 2003 ஆம் ஆண்டு நான் விவசாய துறை அமைச்ராக இருந்தபோது, பசுவதைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தேன்.
 
அந்த மசோதாவை நான் அறிமுகம் செய்தபோதே சபையில் அமளி ஏற்பட்டது. அதன்காரணமாக அப்போது அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.