வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (07:59 IST)

ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: பங்கஜா முண்டே

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று மகாராஷ்டிரா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி பங்கஜா முண்டே விதிமுறைகளை மீறி அரசு அறிவிக்கைகள் வாயிலாக ரூ.206 கோடி வரையிலான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும், இதில் ஊழல் புரிந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் காங்கிரஸ் புகார் செய்தது.
 
மேலும், நீர் பாதுகாப்பு துறையை தன்னிடம் வைத்துள்ள அமைச்சர் பங்கஜா முண்டே, ஜல்னா மாவட்டத்தில் அணைக்கட்டு ஒன்று கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, விதிமுறைகளை மீறி தனக்கு வேண்டிய, பாஜக கூட்டணி கட்சியான ராஷ்டிரீய சமாஜ் கட்சி நிர்வாகி ரத்னாகர் கட்டேக்கு வழங்கியதாக தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் அமைச்சர் பங்கஜா முண்டே இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார்.
 
அப்போது பங்கஜா முண்டே கூறுகையில், "நாங்கள் மேற்கொண்ட கொள்முதல் ஒப்பந்தத்தில், ஒரு ரூபாய் கூட முறைகேடு செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது. ஊழல் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
 
பாஜக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டி கொண்டு திரிகின்றன. என் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் பதவியை விட்டு விலக தயார்" இவ்வாறு கூறியுள்ளார்.