1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (13:49 IST)

என்மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததும் பதவியை ராஜினாமா செய்தேன்: மோடி அரசை மறைமுகமாக தாக்கிய அத்வானி

சுஷ்மா சுவராஜ் மற்றும் வசுந்தரா ராஜே ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி ஹவாலா மேசடி விவகாரத்தில் தனது பெயர் அடிபட்டதும், தான் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறியுள்ளார். 
 
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவையும் பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் அத்வானி கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 
1996 ஆம் ஆண்டு பாஜக எம்.பி.யாக இருந்த அத்வானிக்கு எதிராக ஹவாலா மேசடி குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
 
ஹவாலா மேசடி வழக்கில் சி.பி.ஐ. தரப்பில், அத்வானி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு எதிராக முக்கிய ஆதரமாக ஹவாலா புரோக்கர் எஸ்.கே. ஜெயினின் டைரி சமர்பிக்கப்பட்டது. இருப்பினும், ஹவாலா மேசடி ஊழல் வழக்கில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெளிவாகியதும் மீண்டும் 1998 ஆம் ஆண்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், பெங்காலி பத்திரிக்கைக்கு பேட்டி அளித்து பேசிய அத்வானி "அரசியல்வாதிக்கு, மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கவேண்டும் என்பது மிகவும் பெரிய பொறுப்பு ஆகும். அறநெறி வலியுறுத்துவது என்னவென்றால் ராஜ்தர்மா மற்றும் பொதுவாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது அவசியம் என்பதாகும்." என்று கூறியுள்ளார்.
 
லலித் மோடிக்கு சுஷ்மா மற்றும் ராஜே உதவிசெய்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக அத்வானி கருத்து எதுவும் கூறவில்லை. "இந்நாட்களில், இவை அனைத்திலும் இருந்து நான் விலகியே உள்ளேன். எனவே, இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க என்னிடம் எதுவும் கிடையாது.
 
முடிவு எடுக்கும் இடத்தில் நான் இல்லை, எனவே இந்த விவகாரத்தில் என்னிடம் எந்த ஒரு கருத்தும் இல்லை." என்று அத்வானி கூறியுள்ளார். மேலும், ஹவாலா ஊழலில் தனது பெயர் அடிபட்டதும், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாக அத்வானி கூறியதாக பெங்காலி பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது. 
 
இந்த விவகாரம் தொடர்பாக அத்வானி கூறுகையில், "ஜெயின் டைரியை அடிப்படையாக கொண்டு எனது மீது குற்றச்சாட்டு எழுப்பட்ட நாளன்று மாலை நான் எனது வீட்டில் அமர்ந்திருந்தேன், எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்தேன். இது வேறு யாருடைய முடிவும் கிடையாது. என்னுடையது.
 
பின்னர் என்னுடைய முடிவை வாஜ்பாயிடம் தெரிவித்தேன். அவர் என்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் நான் இந்த விவகாரத்தில் யாருடைய பேச்சையும் அப்போது கேட்கவில்லை." என்று கூறியுள்ளார். 
 
மேலும், "மக்கள் தேர்தலில் நமக்கு வாக்கு அளிக்கின்றனர். எனவே மக்களுக்காக பணியாற்றுவது என்பது மிகவும் முக்கியமானது." என்றும் அத்வானி குறிப்பிட்டுள்ளார். ராஜினாமா செய்வதில் விதிமுறை கொண்டுவரப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில்அளித்து அத்வானி பேசுகையில், "என்னால் என்னுடையதை தெரிவிக்க முடியும். அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய பிரச்சனை ஆகும், அது அவர்களுடைய பிரச்சனை ஆகும். எனக்கு அதுதெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை." என்று கூறியுள்ளார். 
 
அத்வானியின் இந்த கருத்து குறித்து பதிலளித்து பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஷித் அல்வி கூறுகையில், "குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள வசுந்தரா, சுஸ்மா சுவராஜ் அல்லது வேறு யாராவது ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்கு அத்வானி பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழியை காட்டியுள்ளார். என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.