1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2015 (10:37 IST)

குற்றம் செய்த பாஜக அமைச்சர்கள் பதவி விலகும்வரை காங்கிரஸ் ஓயாது - நாராயணசாமி

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாஜக வின் முதலமைச்சர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவி விலகும்வரை காங்கிரஸ் ஓயாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
 
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நாராயணசாமி சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். சுமார் ஒரு மணி நேரம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டார்.
 
பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திரமோ டி அரசு தற்போது அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளது. லலித் மோடிக்கு உதவி செய்த அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, இதே போன்று ஸ்மிருதி இரானி மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளனர்.
 
அனைத்து விஷயங்களுக்கும் வாய்திறந்து பேசும் நரேந்திர மோடி இவர்களின் விஷயத்தில் இதுவரை வாய் திறக்காமல் மவுனியாக இருப்பதன் காரணம் என்ன? அத்வானி மறைமுகமாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறிய பிறகும் இதுநாள் வரை அவர்களை பதவி நீக்கம் செய்யாதது ஏன்? புகாரில் சிக்கிய 4 அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்தால் மோடி அரசு ஆட்டம் கண்டுவிடும். அதனால் தான் பிரதமர் மவுனமாக உள்ளார்.
 
ஊழல் குற்றாசாட்டுகளுக்கு உள்ளான 3 மத்திய அமைச்சர்கள், ஒரு முதலமைச்சர் பதவி விலகும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது. நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கும். எந்தவித செயல்பாடும் நடக்காது. எந்த சட்டமும் நிறைவேறாது. மக்கள் மத்தியில் நரேந்திர மோடியின் சாயம் வெளுத்து வருகிறது.
 
திகார் சிறை மிகவும் பாதுகாப்பானது. அதிலிருந்து சிறை கைதி தப்பித்துள்ளது குறித்து டெல்லி துணை ஆளுனர் உரிய விசாரணை நடத்தினால் இதற்கு யார் காரணம் என்பது தெரிய வரும்.
 
லலித்மோடி, சோனியாவையும், ராகுல் காந்தியையும் எந்த காலத்திலும் சந்தித்தது கிடையாது. லண்டனில் ஒரு விடுதியில் உணவு அருந்தும் போது பிரியங்காவையும் ராபர்ட் வதேராவையும் லலித்மோடி சந்தித்து உள்ளார். இது சகஜமான சந்திப்பு. ஆனால் சுஷ்மா, லலித் மோடியை தனி அறையில் சந்தித்தது தான் குற்றம்.
 
மெட்ரோ ரயில் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தான் வெற்றி பெற்று வருகிறது என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தான் செயல்படுகிறார்கள். இது வருத்தத்திற்கு உரியது.
 
மேலும் ஓட்டிற்கு பணம், மது பாட்டில்கள் ஆகியவையும் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று சொன்னால் ஓட்டிற்கு பணம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
 
எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதியை குறைத்து வழங்குவதால் மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதி நிதி அளிக்கப்பட்டது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் சாராய கடையை அகற்ற கோரி பெண்கள் சாராய கடையை சூறையாடிய சம்பவம் தொடராமல் இருக்க புதுச்சேரி மாநில அரசு மக்கள் உணர்வுகளை புரிந்து அந்த சாராய கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.