1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (11:14 IST)

' ராகுல் காந்திக்கு திருமணம் செய்துவையுங்கள்' - சிவசேனா

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் மனைவியின் பெயரை நரேந்திர மோடி குறிப்பிட்ட விவகாரத்தை வைத்து அவரை விமர்சிப்பதற்கு பதிலாக காங்கிரஸ் அக்கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்திக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுமென சிவசேனா தெரிவித்துள்ளது. 
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா தொகுதியில் போட்டியிட மனு செய்தபோது அதில் யசோதா பென் தன் மனைவி என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதை காங்கிரஸ் உட்பட பல கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வளவு நாட்களாக மனைவியை மறைத்தது ஏன் என்று கூறி, தேர்தல் ஆணையத்திலும்  புகார் செய்தனர்.மேலும், திருமணம் செய்த மனைவியை மறைத்த ஒரு நபரிடம் எவ்வாறு நாட்டை   ஆளும் பொறுப்பை ஒப்படைக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். 
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெரிவித்த சிவசேனா கட்சி, நரேந்திர மோடிக்கும் யசோதா பென்னுக்கும் மிக, மிக இளம் வயதில் திருமணம் நடந்தது. பிறகு தனித்து வாழ்வது என்று இருவரும் பரஸ்பரம் பேசி முடிவு செய்து பிரிந்துள்ளனர். 
 
நரேந்திர மோடி திருமண விஷயத்தை காங்கிரஸ் கட்சியினர்  தேசிய பிரச்சினைபோல பேசுகிறார்கள். மோடி திருமணம் பற்றி பேசினால் விலைவாசி குறைந்து விடுமா? அல்லது நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு மீண்டு வந்து விடுமா?.
 
மோடி திருமண விவகாரம் குறித்து பேசுவதை விட்டுவிட்டு  காங்கிரஸ் கட்சியினர்  ராகுல்காந்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.