வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2015 (14:21 IST)

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல்: தலைவராகிறார் ராகுல் காந்தி?

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல்காந்தி தேர்வுபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
 
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து 17 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தலைவராக இருந்து வருகிறார்.
 
காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்பட அனைத்து பதவிகளுக்கான உட்கட்சி தேர்தலை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
 
தேர்தல் தேதி விவரங்களை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி அறிவித்தார். அகில இந்திய அளவில் இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல்கட்டமாக ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை கேரளா உள்பட 18 மாநிலங்களிலும், 2 ஆம் கட்டத்தில் ஜூலை 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்பட எஞ்சிய மாநிலங்களிலும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 
 
தமிழ்நாட்டை உள்ளடக்கிய 2 ஆம் கட்ட தேர்தல் விவரம் வருமாறு:–
 
காங்கிரஸ் அமைப்பு தேர்தலின் ஆரம்பமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் மே மாதம் 15ஆம் தேதி முடிகிறது. முதலாவதாக ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை வட்டார உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும்.
 
இரண்டாவதாக ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வட்டார காங்கிரஸ் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், 6 மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒரு மாநில குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறும்.
 
மூன்றாவதாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மாவட்ட தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும்.
 
நான்காவதாக செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மாநில தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், மாநில பிரதிநிதிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலும் நடைபெறும்.
 
 
இறுதியாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த கூட்ட தேதி பின்னர் முடிவு செய்யப்படும்.
 
செப்டம்பர் 30 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராகுல்காந்தி இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.