செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (12:40 IST)

ஆந்திராவில் கட்சித் தலைவரை வரவேற்க புறாக்களை பலி கொடுத்த காங்கிரஸார்

ஆந்திராவில் காங்கிரஸ் கட்திக் தலைவரை வரவேற்கும் விதமாக தீபாவளி ராக்கெட் பட்டாசில் புறாக்களை கட்டி விண்ணில் செலுத்தப்பட்டதில் ஏராளமான புறாக்கள் கொல்லப்பட்டன.


 
ஆந்திர மாநி்ல காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகுவீரா ரெட்டி  மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாநில கட்சித் தலைவரின் வருகையை முன்னிட்டு புத்திசாலித்தனமாக அவரை வரவேற்கலாம் என்ற எண்ணம் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில்  உதித்தது.
 
சமாதனத்துக்கு அடையாளமாக விளங்கும் புறாக்களை தனி பெட்டிகளில் அடைத்து அதை ராக்கெட் பட்டாசுகளில் கட்டி விண்ணில் செலுத்துவோம். ராக்கெட் பட்டாசு வெடிக்கும் போது பெட்டிகளும் வெடிக்கும் அப்போது அதில் இருக்கும் புறாக்கள் வானில் சிறகடித்து பறக்கும். இதனைப் பார்த்து தலைவர்  ஆனந்த மகிழ்ச்சியடைவார் என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் ஐடியா.
 
புறாக்களை பயணிகளாக கொண்டிருந்த ராக்கெட்டுகள் விண்ணில் பாய்வதற்கான கவுன்டவுன் தொடங்கியது. தலைவர் மேடை அருகே வந்ததும், ராக்கெட்டுகளை காங்கிரஸ் தொண்டர்கள் விண்ணில் செலுத்தினர்.
 
கவுன்டவுன் முடிவடைந்தவுடன் விண்ணை நோக்கி நின்ற ராக்கெட்டுகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. ஆனால் திட்டமிட்டப்படி புறாக்கள் வானில் பறக்கவில்லை. அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக அவை அனைத்தும் செத்து மடிந்து காங்கிரஸ் தலைவரின் காலடிகளில் விழுந்தன.
 
போர் வேண்டாம் என்று அன்று நேரு சமாதானப் புறா பறக்கவிட்டார். ஆனால் இன்றைய காங்கிரஸார் தங்கள் தலைவரை குதுகலப்படுத்தத புறாக்களை காவு வாங்குகின்றனர். எங்கே செல்கிறது இந்தப் பாதை!