வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (18:52 IST)

ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நடத்துநர்

திருவனந்தபுரம் அருகே ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த நடத்துநரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார் (38) என்பவர் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிறுக்கிழமை சம்பவத்தன்று திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் பேருந்தில் இவர் பணியில் இருந்துள்ளார்.
 
அப்போது, குருவாயூர் செல்வதற்காக அந்த பேருந்தில் ஒரு குடும்பத்தினர் ஏறியுள்ளனர். 3 பேர் அமரும் இருக்கையில் தாய், தந்தை மற்றும் ஒரு மகள் ஆகியோர் அமர்ந்தனர். 17 வயதான மற்றொரு மகள் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரிடம் நடத்துநர் சுனில்குமார் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில், இரவு 9 மணியளவில் பேருந்து திருச்சூர் அருகே குன்னங்குளம் நடுவட்டம் பகுதிக்குச் சென்றபோது, இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி கூச்சல் போட்டார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அவரிடம் என்னவென்று விசாரித்துள்ளனர்.
 
அப்போது நடத்துநர் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அந்தசிறுமி அழுதபடியே கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர் நடத்துநரை தட்டிக்கேட்டுள்ளனர். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனதெரிகிறது. பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் நடத்துநரிடம் கேட்டுள்ளனர்.
 
ஆனால் அதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனவேதனையடைந்த அந்த குடும்பத்தினர் பேருந்தில் இருந்து இறங்கினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து குன்னங்குளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் ஜீப்பில் அந்த பேருந்தை துரத்திச் சென்றனர்.
 
காவல் துறையினரை பார்த்ததும் நடத்துநர் சுனில்குமார் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். அவரை விரட்டி பிடித்து கைது செய்தனர். சில்மிஷ புகாரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.