1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 14 அக்டோபர் 2014 (07:53 IST)

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: முன்னாள் நிலக்கரித் துறைச் செயலருக்கு சம்மன் - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா உள்ளிட்டோருக்கு அக்டோபர் 31 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் வழங்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கமல் ஸ்பான்ஜ் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீதான வழக்கை முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த அறிக்கைகள் மீதான விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர், நீதிபதி பரத் பராசர் உத்தரவு பிரப்பித்தார்.
 
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
 
''இந்த வழக்கில் குற்றம்சாட்டவர்களை, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி கூட்டுச் சதி (120பி), ஏமாற்றுதல் (420) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்தவர்களாகவே கருத வேண்டியுள்ளது.
 
நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் முறைகேடு செய்தது மட்டுமின்றி, ஆணவப்போக்கைக் கொண்டிருந்ததையும் உணர முடிகிறது. எனவே, இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ சமர்ப்பித்த அறிக்கையை தள்ளுபடி செய்கிறேன்.
 
மேலும், குற்றம்சாட்டப்பட்ட நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, முன்னாள் இணைச் செயலர் கே.எஸ். குரோஃபா, நிலக்கரி அமைச்சக முன்னாள் இயக்குநர் கே.சி. சமாரியா, கமல் ஸ்பான்ஜ் நிறுவனத்தின் இயக்குநர் பவன் அலுவாலியா, மூத்த அதிகாரி அமித் கோயல் ஆகியோர் அக்டோபர் 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும்.
 
இதுதொடர்பான ஆவணங்களை விசாரணை நாளுக்கு முன்னதாகவே சிபிஐ அதிகாரிகள் தயார் செய்ய வேண்டும்“ என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித்துறைச் செயலர் பி.சி.பாரேக் ஆகியோர் மீதான வழக்குகளை முடித்துக் கொள்வது தொடர்பான அறிக்கை மீதான விசாரணையை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.