வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (12:43 IST)

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் சட்ட விரோதமானவை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முறைகேட்டால் அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக கடந்த 2012 ஆம் ஆண்டில் அன்றைய மத்திய தலைமைக் கணக்காயர் (சிஏஜி) வினோத் ராய் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

ஆனால், இந்த வழக்கு விசாரணை, முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ இது குறித்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணையின்போது, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது

மேலும், சட்ட விரோதமாக 218 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குரைஞர் எம்.எல்.சர்மா, ‘காமன் காஸ்' என்ற தொண்டு அமைப்பு ஆகியவை கடந்த 2012 ஆம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, மதன் பி. லோகூர், ஜோசப் குரியன் ஆகியோர் கொண்ட அமர்வு மேற்கண்ட தீர்ப்பை அளித்தது.

163 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் விவரம்:-

“1993 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் தேர்வுக் குழு வழியாகவும், அரசு ஒதுக்கீடு முறையிலும் நடைபெற்றுள்ளன.

1993 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு வரை நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பாக 36 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில், தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக் குழுவின் முடிவுகள் ஒருபோதும் வெளிப்படையாக இருந்ததில்லை.

இந்தக் குழு முறையாக ஆய்ந்தறியாமலும், விதிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் விதிமுறைகளை மீறியும் உள்ளது. ஒழுங்குமுறை இல்லாமலும், ஒருதலைபட்சமாகவும் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பொது மக்களின் நலன் கடுமையாக பாதிக்கப்படும் வகையில், நாட்டின் வளம் தவறான முறையில் கையாளப்பட்டுள்ளது. ஆகையால், தேர்வுக் குழுவின் 36 கூட்டங்களில் அனுமதி அளிக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்ட விரோதமானவையாகும்.

மாநில அரசுகளோ அல்லது மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்களோ நிலக்கரிச் சுரங்கங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்தக் கூடாது. இது நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டத்துக்கு எதிரானது.

இது தொடர்பாக தகுதியற்ற நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களும் செல்லாது. இரும்பு, எஃக்கு, மின் உற்பத்தி, நிலக்கரி சுத்திகரிப்பு, சிமென்ட் தயாரிப்பு ஆகிய துறைகளில் ஈடுபடும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுனங்களுக்கு மட்டுமே நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அல்ட்ரா மெகா மின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்கள் குறைந்தபட்ச ஏல நிர்ணயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு கடைப்பிடிக்கும் இந்த முறை பிற முறைகளை விடச் சிறந்ததா? என்பதை நீதிமன்றத்தால் முடிவு செய்ய இயலாது.

மின் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் அந்தத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படக் கூடாது.

தேர்வுக் குழு மூலமும், அரசு ஒதுக்கீடு முறையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் சட்ட விரோதமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனால் எழும் விளைவுகள் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த விசாரணை, செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும்“ என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து, நீதிமன்ற அறையில் வாசித்த பின்னர் நீதிபதிகள் வாய்மொழி மூலமாகக் கூறியதாவது:-

“ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலக்கரிச் சுரங்கங்களின் எண்ணிக்கை குறித்து அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆகையால், இது குறித்து ஆராய, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.