1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (00:30 IST)

எச்சரிக்கை! - இந்தியாவில் 1.3 லட்சம் மனித உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்

காலநிலை மாற்றம் காரணமாக மட்டும், 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 லட்சத்து 30 ஆயிரம் மனித உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
 

 
இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிடும் மருத்துவ இதழான லான்செட் சமீபத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
 
காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இறக்க நேரிடும் என அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. உணவு உற்பத்தி திறன் வீழ்வதால் தனி மனிதனின் உணவு நுகர்தலிலும், உடல் எடையிலும் கூட பெரும் ஏற்ற இறக்கங்கள் உருவாகும் என அது எச்சரிக்கிறது.
 
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சத்து 29 ஆயிரம் மனித உயிரிழப்புகள் ஏற்படும் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படும் ஒட்டுமொத்த மனித இறப்பு விகிதத்தில் 4-1 என்ற அடிப்படையில் இந்தியாவில் மனித உயிரிழப்புகள் ஏற்படும் என்பது இந்தியா எதிர்கொள்ளும் நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது.
 
.2050-ஆண்டுக்குள் ஒரு தனிநபர் காய்கறிகள் உட்கொள்ளும் அளவில் சராசரியாக 4 சதவிகிதம் குறைந்துவிடும். இது காய்கனிகள் உட்கொள்வதில் மிகப்பெரும் குறைப்பு ஆகும். அதேபோன்று பழங்கள் உட்கொள்ளுவதில் 3.2 சதவிகிதமும் இறைச்சி உட்கொள்வதில் 0.7 சதவிகிதமும் சராசரியாக குறைந்து விடும் என அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
 
இதனால், இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்பட்டு மரணங்கள் அதிகரிக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மக்கள் சுகாதாரத் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்- மருத்துவர் மார்க்கோ ஸ்பிரிங்மேன் கூறியுள்ளார்.