1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (15:39 IST)

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த 18 ஆண்டுகள் வரை ஆகும் - மத்திய அரசு

கங்கை நதியை முழுவதுமாக தூய்மைப்படுத்த 18 ஆண்டுகள் வரை ஆகும் எனவும் இதனை நடைமுறைப்படுத்த பல ஆயிரம் கோடிகள் செலவாகும் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
 
மத்தியில் ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு கங்கை நதியைச் சுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கைக் குறித்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதன்படி செயல்பட்டால் கங்கை நதியை 200 ஆண்டுகள் ஆனாலும் தூய்மைப்படுத்த முடியாது போலிருக்கிறதே. 
 
இதற்கான சரியான திட்டத்தை வகுத்து அடுத்த தலைமுறையினராவது 
கங்கை நதியை தூய்மையான நிலையில் பார்க்க வழி செய்யுங்கள். நாம் தூய்மையான கங்கையைப்  பார்க்கமுடியுமா எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தது.  
 
இதையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் 2, 500 அடி நீளமுள்ள கங்கை நதியை மூன்றுக் கட்டங்களாகத் தூய்மைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், முதற்கட்ட தூய்மையை முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என்றும், இரண்டாம் கட்டத் தூய்மைப் பணிகளை முடிக்க 5 ஆண்டுகள் ஆகும் என்றும், 3ஆம் கட்டத் தூய்மைப் படுத்தும் பணிகளை முடிக்க 10 ஆண்டுகள் ஆகும் என்றும், ஆக மொத்தத்தில் கங்கையைத் தூய்மைப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்ப்பும் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.