குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டதை, நாயை கல்லால் அடிப்பதுடன் ஒப்பிடுவதா?


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 22 அக்டோபர் 2015 (17:03 IST)
தலித் குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை, நாயை கல்லால் அடிப்பதுடன் ஒப்பிடு பேசுவதா? என்று மத்திய இணை மந்திரி வி.கே.சிங்கிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
 
ஹரியானாவில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 10 மாதங்களே ஆன ஒரு குழந்தையும் 2 வயதான இன்னொரு குழந்தையும் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடாளாவிய ரீதியில் கண்டன அலையை எழுப்பியுள்ளது.
 
தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், ”நாட்டில் நடைபெறும் அனைத்திற்கும் அரசையே குறை கூறாதீர்கள். இது இரு குடும்பங்களுக்கு இடையேயான பகையால் நிகழ்ந்தது.
 
நாய் மீது யாரோ ஒருவர் கல் எறிந்தால், அதற்கு அரசு பொறுப்பில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
 
மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் கருத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்ரேவாலா கூறும்போது, “இது கண்டனத்துக்குரிய கருத்து, அதிர்ச்சிகரமான கருத்து, மனிதத் தனமையற்ற பேச்சு, தலித் சமுதாயத்தினரை மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அவரது பேச்சு புண்படுத்தியுள்ளது.
 
இரண்டு குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை நாயை கல்லால் அடிப்பதுடன் ஒப்பிடுவது எவ்வளவு கண்டிக்கத்தக்கது? இது மத்திய அரசின் மனநிலையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :