வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (14:50 IST)

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களை நாய்கள் என்று கூறிய சந்திரசேகர ராவ்

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் 14 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹைத்ராபாத்தில் அக்கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
 
செகந்திராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடந்த இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாலையில்தான் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மதியமே மைதானம் நிரம்பி வழிந்தது.
 
கூட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் பேசினார். அப்போது தெலுங்கானா கிராமத்து மக்கள் பேசுகிற பேச்சு மொழியில் சந்திரபாபு நாயுடுவின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சித்தார்.
 
அவர் பேசியதாவது:
 
நமது பக்கத்திலே ஒரு முதல்வர் இருக்கிறார். அவர் கிருக்கிடு நாயுடு (பைத்தியக்காரர்) அவரது மாநிலத்திலேயே பொய்யான வாக்குறுதி கொடுத்து மோசடி ஆட்சி நடத்தி வருகிறார்.
 
அவரது மாநிலத்தில் மகளிர் குழு கடன்களை ரத்து செய்யவில்லை. விவசாயிகள் கடனை ரத்து செய்யவில்லை. அவரது மாநிலத்திலேயே ஏராளமான பிரச்சினைகள் இருக்கிறது. அதை தீர்ப்பதை விடுத்து காலையில் எழுந்ததும் நமது மாநிலத்தில் யாரை சீண்டிப் பார்க்கலாம் என்று செயல்படுகிறார்.
 
சொந்த அம்மாவுக்கு சோறு போட வக்கில்லாதவர் சித்திக்கு தங்க வளையல் செய்வதாக சொல்கிறார். மெகபூப் நகரில் அவர் சமீபத்தில் கூட்டம் நடத்தினார். அங்கே நமது கூட்டத்தில் சுண்டல் விற்பவர்களின் எண்ணிக்கையில் கூட அவரது கூட்டத்துக்கு ஆட்கள் வரவில்லை. அதை அவர் பெருமையாக கூறுகிறார்.
 
தெலுங்கானாவில் அவரது வளர்ப்பு நாய்கள் (எம்.எல்.ஏ.க்கள்) சில உள்ளன. அது நம்மை பார்த்து குறைக்கிறது.
 
அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. செயல்தான் நமக்கு முக்கியம். தங்க தெலுங்கானா உருவாக்குவதுதான் நமது லட்சியம். இங்குள்ள ஒவ்வொரு ஏழைகளின் கண்களிலும் பிரகாசமான ஒளி தெரியவேண்டும். அப்போதுதான் நாம் சாதித்ததன் அர்த்தமாகும் என்று அவர் பேசினார்.
 
சந்திரசேகரராவ் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரங்காரெட்டியில் நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசினார்.
 
அவர் பேசியதாவது:
 
என்.டி.ராமராவ் பாசறையில் வளர்ந்த சந்திரசேகர ராவ் சரித்திரம் மறந்து பேசுகிறார். தெலுங்கானாவில் இருப்பவரும் நமது தெலுங்கு மக்கள்தான் என்னை பொறுத்தவரை 2 மாநிலமும் எனது இரு கண்கள் போன்றது. அங்குள்ள மக்களுக்கு அநீதி நடக்கும் போது நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். தெலுங்கு மக்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது.
 
சந்தையில் மாடு வாங்குவது போல தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களை சந்திரசேகரராவ் விலை கொடுத்து வாங்கி வருகிறார் என்று அவர் பேசினார்.