வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (19:23 IST)

பாகிஸ்தான் தாக்குதல் எதிரொலி: பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் ராணுவப் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்தியாவில் கல்வி நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற வளாகத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது, பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு, "இந்தியாவில், கல்வி நிலையங்களின் பாதுகாப்பை மேம்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி நிலையங்களுக்கு அனுப்பப்படும்" என்றார்.
 
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, "பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஏதுவாக பள்ளிகளில் ரகசிய வழிகள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினர்.
 
மேலும், பிணைக்கைதிகளாக சிக்குவதில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது, அவசர நிலைகளில் கதவுகளை தாழ்பாழ் போட்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது" என்றார்.
 
முன்னதாக, கடந்த 2010ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபின்னர் பள்ளிகளுக்கு இதுபோன்ற சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதன்பிறகு, இப்போது அதே பரிந்துரை மேம்படுத்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
 
டெல்லி, மும்பை, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு சிறப்பு சுற்றறிக்கைகள் அனுப்பப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.