வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2016 (03:58 IST)

’போலீஸ் வேடிக்கை பார்த்தது’ - காவிரி வன்முறைகள் குறித்து தமிழக, கர்நாடக அரசுகளுக்கு நோட்டீஸ்

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் நடந்த வன்முறை தொடர்பாக, இரு மாநில அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. தமிழக வாகனங்களை நிறுத்துவதோடு அடித்து நொருக்கி தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியது.
 
இதேபோல் தமிழகத்திலும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
 
அதேபோல, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். 1991ஆம் ஆண்டிற்கு பிறகு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதுபோல வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
 
இது குறித்து வீடியோக்களை இரு மாநிலத்தை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்ந்து ஒலிபரப்பி வந்தன. இந்நிலையில், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்த கடும் அதிருப்தியை மனித உரிமை ஆணையம் வெளிப்படுத்தி உள்ளது.
 
இது குறித்து தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம், ”தொலைக்காட்சிகளில் வெளியான வன்முறைக் காட்சிகளைப் பார்க்கும்போது, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள போலீஸ் மற்றும் சிவில் அதிகாரிகள் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 

 
சட்டவிரோத, வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க, முன்னதாகவே திட்டமிட்டு செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
 
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சனை என்று தெரிந்திருந்த நிலையிலும், மோசமான சூழ்நிலை ஏற்படலாம் என்று கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தவறி விட்டனர்.
 
தனி நபர்கள் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் பெருமளவில் அழிக்கப்பட்ட பிறகுதான். போலீஸ் மற்றும் சிவில் அதிகாரிகள் விழித்துக் கொண்டார்கள்” என மனித உரி உரிமை ஆணையம் கண்டித்துள்ளது.
 
மேலும், காவல்துறை மற்றும் சிவில் அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், மக்களின் பாதுகாப்பு தொடர்பான மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி, ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இதுதவிர, வன்முறையின்போது, காயமடைந்தவர்கள் பற்றிய விவரம், சேதப்படுத்தப்பட்ட தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் பற்றிய விவரம் ஆகியவற்றை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.