வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2016 (21:15 IST)

காவிரி வழக்கு ; நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை : பதட்டத்தில் கர்நாடகா

காவிரி வழக்கு ; நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை : பதட்டத்தில் கர்நாடகா

காவிரி தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதால் கர்நாடகாவில் பதட்டம் நிலவி வருகிறது.


 

 
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலத்தில் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடியது. முக்கியமாக பெங்களூரில் போரட்டம் கட்டுக்கு அடங்காமல் போனது. தமிழகத்தை சேர்ந்த 10 லாரிகள் மற்றும் 50 தனியார் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் எரிக்கப்பட்டது. 
 
தமிழர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். தமிழக வாகனங்கள் கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. கர்நாடகாவின் செயலை கண்டித்து கடந்த 16ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அதன்பின் கர்நாடகா இயல்பு நிலைக்கு திரும்பியது. 
 
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்று கர்நாடக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. கடந்த 12ஆம் தேதி இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருகிற 20ஆம் தேதி வரை 12,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிட்டது.     
 
அதைத்தொடர்ந்து காவிரி மேற்பார்வை குழு கூட்டம் கடந்த 12ஆம் தேதி நடைப்பெற்றது. அதில் இரு மாநிலங்களும் தங்களுக்கு கிடைத்த நீரின் அளவு உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் டெலியில் மீண்டும்  காவிரி மேற்பார்வை குழு கூட்டம் கூடியது. 
 
கர்நாடகா மாநிலம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கர்நாடகத்தில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று தெரிவித்தனர். தமிழக அதிகாரிகள் கர்நாடகா மாநிலம் தமிழகத்திற்கு தர வேண்டிய 64 டி.எம்.சி தண்ணீரை தந்தே தீர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
 
இந்நிலையில் காவிரி மேற்பார்வை குழு இறுதியில், செப்டம்பர் 21ம் தேதி முதல் மேலும் 10 நாட்களுக்கு கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
 
ஆனால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என்று, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், காவிரி நீர் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கர்நாடகாவில் மீண்டும் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
எனவே அதை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் 21ம் தேதி வரை கர்நாடகாவில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். அதேபோல், 144 தடை உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும்.  பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாமா வேண்டாமா என்பதை தனியார் பள்ளிகளின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.