வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 15 ஜூலை 2014 (11:35 IST)

7 ஆண்டுகளுக்குப் பின் காவிரி நடுவர் மன்றம் டெல்லியில் கூடுகிறது

டெல்லியில் உள்ள ஜன்பத் பவனின் ஐந்தாவது தள மகாதயி நீர் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்பாய அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு நீதிபதி சௌஹான் தலைமையில் காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இறுதி உத்தரவை, ஆணையம் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் காவிரி நதிநீர் ஆணையத்தில் முறையிட்டன.

ஆனால், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு கோரிக்கை மனுக்களை மூன்று மாநில அரசுகளும் தாக்கல் செய்ததால், காவிரி நடுவர் மன்றத்தில் விசாரணை செய்ய முடியாது என, அப்போதைய தலைவராக இருந்த என்.பி. சிங் மறுத்துவிட்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த மனுக்கள் நிலுவையில் இருந்தன. இந் நிலையில், நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி. சிங், 2012 ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பிறகு நடுவர் மன்றத் தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், நடுவர் மன்றத் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பி.எஸ். சௌஹானை மத்திய அரசு கடந்த மே மாதம் நியமித்தது.

இதையடுத்து, ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் தில்லியில் ஜூலை 15 ஆம் தேதி கூடுகிறது. இதில் மத்திய அரசு, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளின் மேல் முறையீடு குறித்து விசாரணை நடைபெறவுள்ளது.