வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (09:34 IST)

ஹர்திக் படேல் மீது மீண்டும் வழக்குப் பதிவு

அனுமதியின்றி கூட்டம் நடத்தியதால் ஹர்திக் படேல் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 


குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் பட்டேல். இந்தக் கோரிக்கையை முன்வைத்து பட்டேல் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.
 
தடியடி, கண்ணீர் புகைக்குண்டு என வன்முறையில் ஈடுபட்ட பட்டேலின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
 
அனுமதியின்றி போராட்டங்களை நடத்தியதால் ஹர்திக் படேல் பல முறை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். படேலின் போராட்டத்தை முடக்க வழிதெரியாமல் குஜராத் அரசு கையைபிசைந்து கொண்டு இருக்கிறது.
 
இந்நிலையில் அங்குள்ள மேசானா மாவட்டத்தில் ஹர்திக் படேல் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஹர்திக் படேல் அரசிடம் இருந்து முன்அனுமதி பெறவில்லை. 
 
இந்நிலையில் முன் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூறி ஹர்திக் பட்டேல் மீது  மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஹர்திக் பட்டேல் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 188 ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரை தற்போது கைது செய்யும் எண்ணம் இல்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.