செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (16:22 IST)

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞர் நியமனம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, அவருக்கு 4 வருட சிறைதண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.
 
அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாரகன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபரதாமும் விதித்து
 
பின்னர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 7ஆம் தேதி நீதிபதி சந்திரசேகர் ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்.
 
கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததால் ஜெயலலிதா சார்பில் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
 
அப்போது இந்த வழக்கின் மேல் முறையீட்டு ஆவணங்களை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனு மீதான விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அதன்படி ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருடைய மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது.
 
இந்த மேல்முறையீட்டு வழக்கிலும், அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே ஆஜரானார். இதனால், அவரது நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு முன்னர் இந்த விசாரணை நடைபெற்றது. 
 
நேற்று திங்கட்கிழமை [27-04-15] இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அளித்துள்ள தீர்ப்பில், ’மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆச்சார்யாவை சிறப்பு அரசு வக்கீலாக நியமித்தும், உதவி வழக்கறிஞராக சந்தே சவுட்டாவை நியமித்தும் கர்நாடக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 
 
மாலை 4 மணிக்கு எழுத்துப்பூர்வ வாதத்தை பி.வி.ஆச்சார்யா தாக்கல் செய்கிறார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கிற்கு முன்பே அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா பணியாற்றினார்.
 
ஆனால், ஜெயலலிதா தரப்பு தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக புகார் அளித்தார். இதனால், தான் இந்த வழக்கிலிருந்து விலக விரும்புவதாக கூறியதையடுத்து பொறுப்பிலிருந்து ஆச்சார்யா விலகியதும் குறிப்பிடத்தக்கது.