வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (09:19 IST)

கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நிறுவனத்திடம் இருந்து சோனியா, ராகுல் ரூ.1 கோடி கடன்: பா.ஜ.க. பகீர் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நிறுவனத்திடம் இருந்து சோனியா, ராகுலுக்கு சொந்தமான கம்பெனி  1 கோடி ரூபாய்  கடன் பெற்றிருப்பதாக   பா.ஜ.க. பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது.


 
 
பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தான் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளவர்.
 
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " ''கடந்த 2010–ம் ஆண்டு டிசம்பர் மாதம், ‘யங் இந்தியன்‘ என்ற கம்பெனி தொடங்கப்பட்டது. அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலா 38 சதவீத பங்குகள் வைத்துள்ளனர். மொத்தம் 76 சதவீத பங்குகள் இருந்தாலே, உரிமையாளருக்கான உரிமைகள் வந்து விடும். மீதி 24 சதவீத பங்குகளை ஆஸ்கர் பெர்னாண்டஸ், மோதிலால் வோரா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் வைத்துள்ளனர்".
 
"இந்த கம்பெனி, 'டோடெக்ஸ் மெர்க்கன்டைஸ்' என்ற நிறுவனத்திடம் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளது. அதை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஓராண்டு நீட்டிக்கும் யோசனை, கடந்த ஆண்டு செப்டம்பர் 23–ந் தேதியன்று சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற கம்பெனியின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு உள்ளது".
 
"கடன் கொடுத்த டோடெக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதன் உரிமையாளர், வருமான வரித்துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன".
 
"கடன் பெற்றபோது, காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பின்னணி பற்றி அவர்களால் விசாரித்திருக்க முடியும். இந்த ஒரு கோடி ரூபாய், ஒரு துளி மட்டுமே. இந்த கருப்பு பணம் யாருடையது? நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் இவற்றில் எதனுடன் தொடர்புடையது? அரசியல் சுற்றுலா சென்று வரும் ராகுல், இதற்கு பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.
 
பா.ஜ.க. வின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது. பீகார்  தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதை உணர்ந்து இது போன்ற அபத்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. கூறி வருவதாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.