வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (21:31 IST)

பாஜக மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சி, ஹரியானாவில் தனிமெஜாரிட்டி

ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. ஹரியானாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் பாஜக, மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
'மோடி அலை'யின் காரணமாக இந்த வெற்றி சாத்தியமானது என்று கூறும் பாஜக, மகாராஷ்டிராவில் சிவசேனா அல்லது தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பாஜக - சிவசேனைக் கூட்டணியும் முறிந்ததால் நான்கு கட்சிகளும் மகாராஷ்டிராவில் தனித்தனியே களம்கண்டன. மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 123 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
 
மகாராஷ்டிர வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு தர தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். இதன்பின், திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் ஆதரவுக் கரம் நீட்டியது. பாஜக ஆட்சியமைக்க நிபந்தனை அற்ற ஆதரவை வெளியில் இருந்து தரத் தயாராக இருப்பதாக, சரத் பவாரின் தலைமையிலான அக்கட்சி தெரிவித்தது.
 
பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ள பாஜக தலைவர் அமித் ஷா, 40 இடங்களைக் கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெறுவதற்கு தவிர்க்க முன்வரவில்லை. அதேவேளையில், தனது கூட்டணியில் இருந்து பிரிந்து 62 இடங்களைக் கைப்பற்றியுள்ள சிவசேனாவின் ஆதரவை மறைமுகமாக புறக்கணித்திருக்கிறார். எனினும், கட்சியின் ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
 
இந்த வெற்றிகளின் மூலம் மக்களால் தவிர்க்க முடியாத தன்னிகரற்ற தலைவர் என்பதை மோடி நிரூபித்துவிட்டதாக அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள காங்கிரஸ் 42 இடங்களை மட்டுமே தக்கவைத்தது. இரு மாநில மக்களும் மாற்றத்தை விரும்பியிருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
 
பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள காரணத்தாலும், அக்கட்சியே மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும் மாநில மேம்பாட்டு நலனைக் கருத்தில்கொண்டு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு நல்குவதாக, பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று தான் நம்புவதாக, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். சிவசேனா ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமையும் என்று விரும்புகிறார்.
 
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சிவசேனா உடனான 25 ஆண்டு கால கூட்டணி உறவு முறிந்திருக்கக் கூடாது. ஆனால், தேர்தல் முடிவுகளால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
 
சிவசேனா உடனான பழைய உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று நம்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார் அத்வானி.
 
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைந்த காங்கிரஸை வீழ்த்தி, ஹரியானாவில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது.
 
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 47-ஐ வசப்படுத்தியிருக்கிறது பாஜக. இந்திய தேசிய லோக் தளம் 20 இடங்களுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. காங்கிரஸ் 15 இடங்களுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
 
ஹரியானாவில் காங்கிரஸின் தோல்வியை ஏற்பதாக, அம்மாநிலத்தின் பதவி விலகும் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.
 
தேர்தல் முடிவுகள் பற்றி, பதவி விலகும் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கூறும்போது, "இது மக்கள் தீர்ப்பு. இதை ஏற்றுக்கொள்கிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகள்.
 
ஹரியானாவின் வளர்ச்சிக்கு புதிதாக பொறுப்பேற்கும் அரசு தடையாக இருக்காது என்று நம்புகிறேன்" என்றார் ஹூடா.
 
மகாராஷ்டிரா-ஹரியானா தேர்தல் முடிவுகள் நிலவரம்:-
 
மகாராஷ்டிரா: (மொத்த இடங்கள் 288)
 
பாஜக - 123
சிவசேனா - 63
காங்கிரஸ் - 42
தேசியவாத காங்கிரஸ் - 41
இதர கட்சிகள் - 19
 
ஹரியானா: (மொத்த இடங்கள் 90)
 
பாஜக - 47
ஐ.என்.எல்.டி - 20
காங்கிரஸ் - 15
இதர கட்சிகள் - 8