1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (18:32 IST)

சோனியா காந்தி கறுப்பாக இருந்திருந்தால் காங்கிரஸ் ஏற்றிருக்குமா? - பாஜக எம்பி பேச்சால் சர்ச்சை!

சோனியா காந்தி கறுப்பினத்தவராக இருந்திருந்தால் அவரை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டிருக்காது என சர்ச்சைக்குரிய வகையில் பீகார் மாநில நவாதா தொகுதி பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.
 

 
பாட்னாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கிரிராஜ் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்தும், துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்தும் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
 
எம்.பி. கிரிராஜ் சிங் பேசும்போது, "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஒரு நைஜீரியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அந்தக் கட்சி ஏற்றுக் கொண்டிருக்குமா? அதற்கு வாய்ப்பே இல்லை" என்று குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து பேசிய அவர் ராகுல் காந்தியை குறிப்பிட்டு, “ மாயமான மலேசிய விமானத்தைப் போல காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் காணாமல் போய்விட்டார். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், அந்த ஆட்சியில் பிரதமராக ராகுல் காந்தி பதவி வகிக்கும் நிலை ஏற்பட்டிருந்தால், இதேபோல அவர் காணாமல் போனால் என்ன ஆவது? இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதுமாக முடிந்து விட்டது. இன்னும் அவர் வரவில்லை" என்றார்.
 
பாஜக எம்.பி. கிரிராஜ் சிங்கின் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கிரிராஜின் பேச்சுக்கு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
 
இதனிடையே தனது பேச்சு குறித்து பதிலளித்த கிரிராஜ் சிங், "நான் தனிப்பட்ட முறையில்தான் அவ்வாறு பேசினேன். நான் பேசிய விதம் அல்லது எனது பேச்சு எடுத்துக்கொள்ளப்பட்ட விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். இருப்பினும் எனது பேச்சால் சோனியா, ராகுல் உட்பட எவருடைய உணர்வுகளை நான் புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
 
சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கும் பாஜக எம்.பி. கிரிராஜ் சிங், பிரதமர் மோடிக்கு நெருங்கிய நபராக கருதப்படுகிறார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களுக்கு நாட்டிலேயே இடமில்லை என்று இவர் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.