வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (06:59 IST)

நான் பிரதமர் அல்ல, இந்த நாட்டின் பிரதம காவலன் - மதுராவில் முழங்கிய நரேந்திர மோடி

இந்த நாட்டையும் சரி, உங்களுடைய பணத்தையும் சரி, யாரும் கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த ஆட்சியில் ஊழலுக்கு இடம் இல்லை.  நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல, நாட்டின் பிரதம காவலன் என்று நரேந்திர மோடி கொள்கை முழுக்கமிட்டார்.
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம்  தேதி பதவி ஏற்றது. நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்து  ஓராண்டு நிறைவடைந்தது.
 
இதை, நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பாஜக திட்டமிட்டது. அதன்படி, நாடு முழுவதும் ஒரு வாரம் 200 பொதுக்கூட்டங்களும், 5 ஆயிரம் சிறிய கூட்டங்களும் நடத்தப்பட உள்ளது.
 
இதன், முதல் பொதுக்கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் மதுரா பாராளுமன்ற தொகுதியில், ஜனசங்கத்தின் கொள்கைவாதியான தீன் தயாள் உபாத்யாயின் சொந்த ஊரான நாக்லா சந்திராபன் கிராமத்தில் நடைபெற்றது.
 
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:–
 
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் என பல ஊழல்கள் நடைபெற்றது.
 
இந்த ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் சிறை சென்றனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் அப்போது ஆட்சி நடைபெற்றது.
 
கடந்த 60 ஆண்டுகளாக டெல்லியில் அவர்களுடைய குரல்தான் ஓங்கி ஒலித்தது. அவர்களுடைய விருப்பப்படி தான் இந்த தேசம் ஆளப்பட்டது.
 
இதனால் தான் மக்கள் மாற்றம் கோரி, ஆட்சி மாற்றம் செய்தனர். அப்போது மட்டும் மக்கள் துணிச்சலான அந்த முடிவை எடுக்காமல் விட்டிருந்தால், நாடு இன்னும் அதலபாதாளத்துக்கு சென்று இருக்கும்.
 
அந்த ஆட்சி, இன்னும் ஒரு ஆண்டு நீடித்து இருந்தால் கூட இந்த தேசத்திற்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். அந்த மோசமான நாட்கள் முடிந்துவிட்டது. நாட்டுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.
 
ஆனால், இந்த தேசத்தை கொள்ளையடித்தவர்களுக்கும், கொடுமை செய்தவர்களுக்கும், வரும் காலத்தில் நிச்சயம் தொல்லைகள் இருக்கும். அது மேலும் மேலும் அதிகரிக்கும்.
 
விவசாயிகள் தற்கொலை பிரச்சினையை அரசியல் ஆக்க விரும்பவில்லை. அவர்களின் துயரத்திற்கு தீர்வுகாண விரும்புகிறேன்.
 
மாதம் ஒரு ரூபாய் செலுத்தி ரூ.2 லட்சம் காப்பீடு பெறும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் உரிய அதிகாரங்களை வழங்குவோம். நடைமுறைக்கு ஒவ்வாத 1,300 பழைய சட்டங்களை நீக்குவோம்.
 
கங்கையும், யமுனையும் என் தாய் போன்றவர்கள். இந்த நதிகளை சுத்தம் செய்யவேண்டும். இதற்கு உங்களின் உதவியும், ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.
 
மத்திய அரசு ஒதுக்கும் ஒரு ரூபாயும் முழுமையாக மக்களை சென்று அடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
 
நாட்டில் வறுமையை ஒழிப்பதில் உறுதிபூண்டு இருக்கிறோம். விலைவாசி உயர்வை நாங்கள் கட்டுப்படுத்தி உள்ளோம், அன்னிய செலாவணியை அதிகரித்துள்ளோம். இது எல்லாமே பாஜக அரசின் மகத்தான சாதனைகள்.
 
இந்த நாட்டையும் சரி, உங்களுடைய பணத்தையும் சரி, யாரும் கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த ஆட்சியில் ஊழலுக்கு இடம் இல்லை. ஊழலுக்கு முடிவுகட்டி உள்ளோம். ஊழலுக்கும் இந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் தலையீடு இல்லாத ஒரே ஆட்சி இந்த ஆட்சிதான்.  நான் இந்த நாட்டின் பிரதம மந்திரி அல்ல, பிரதம காவலன் என்றார்.
 
இந்த கூட்டத்தில் மதுரா தொகுதி எம்.பியும், நடிகையுமான ஹேமமாலினி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.