வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (11:31 IST)

தீ வைத்து அழிக்கப்படும் வாத்துகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்: உம்மன் சாண்டி அறிவிப்பு

கேரளாவில் பறவைக் காய்ச்சலால் எரித்து, அழிக்கப்பட்ட வாத்துகளை வளர்த்த பண்ணை உரிமையாளர்களுக்கு மாநில அரசு சார்பில் நஷ்டஈடு வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
 
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பறவை பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சில வாத்துகள் உயிரிழந்தன.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பண்ணை உரிமையாளர்கள் இறந்த வாத்துகளின் மாமிசங்களை பரிசோதனை செய்த போது அவற்றிற்கு எச் 5 ஏவியன் இன்புளூயன்சா வைரஸ் எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.
 
இந்த தகவல் பரவியதும் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, கால்நடை துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, நோய் பாதித்த வாத்துகளை உடனே தீ வைத்து எரித்து அழிக்க முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி, இந்நோயின் தாக்கம் உள்ள ஆழப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள வாத்து பண்ணை உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த வாத்துக்கள் ஊருக்கு வெளியே உள்ள பொட்டல் காட்டில் தீவைத்து அழிக்கப்பட்டன.
 
மேலும் இம்மாவட்டங்களில் உள்ள 12 கிராமங்களில் இந்நோய் பரவியிருக்கலாம் என்று கால்நடை துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
 
எனவே இப்பகுதிகளில் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல கோழிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்றும், அதிகாரிகள் கிராமம், கிராமமாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
 
பறவைக் காய்ச்சலால் எரித்து கொல்லப்பட்ட வாத்துகளை வளர்த்த பண்ணையாளர்களுக்கு மாநில அரசு சார்பில் நஷ்டஈடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபற்றி முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியதாவது:–
 
உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நெறிமுறைகள்படி மாநிலத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நோயை கட்டுப்படுத்த மத்திய அரசிடமிருந்து கூடுதல் தடுப்பு மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
 
வாத்து வளர்ப்போருக்கு நஷ்டஈடு வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நோய் மனிதர்களைப் பாதிக்காது என்று கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
பறவைப் பண்ணைகள் அதிகம் உள்ளப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள், முடுக்கி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.