1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (09:50 IST)

4 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்குப் பின்னடைவு

பிகார், கர்நாடகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பிகாரில் 10 தொகுதிகளில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலின் வாக்குகள் 25 ஆம் தேதி திங்கட் கிழமை எண்ணப்பட்டன. அதில், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதீஷ் குமார் சார்ந்துள்ள ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி அடங்கிய மதச்சார்பற்றக் கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி பார்பட்டா தொகுதியில் தோல்வியைத் தழுவியது.

பாகல்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பார்பாட்டா, ஜாலே தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளம் வென்றுள்ளது. ராஜ்நகர், சாப்ரா, மொஹியுதின்நகர் ஆகிய தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

முந்தைய தேர்தலில் பாஜக வசமிருந்த தொகுதிகளை தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

லாலு பிரசாத்-காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தன.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

பஞ்சாப் மாநிலத்தில் இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சிரோமணி அகாலி தளம் கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.

கர்நாடக மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் இரண்டு தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றார். இதன் மூலம் பாஜகவுக்கு 1 இடம் கிடைத்தது.

பாஜகவின் கோட்டையாகக் கருதப்பட்டுவந்த பெல்லாரி ஊரகத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஓபலேஷைவிட 33,104 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.