வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 12 ஜூலை 2014 (10:10 IST)

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் என்று பேசிய ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ்

மகாத்மா காந்தியின் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தொடர்பு என்று கூறிய வழக்கில் அக்டோபர் 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.
 
கூட்டத்தில் அவர் பேசும்போது, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு, இப்போது தேர்தல் பிரச்சாரத்துக்கு காந்தியின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.
 
ராகுல் காந்தியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ராகுல் காந்தி மீது பிவாண்டி நீதிமன்றத்தில் குற்ற வழக்கும் தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பித்தார்.