வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2015 (20:39 IST)

போலி சான்றிதழ்: மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சிக்கினார்

போலி கல்வி சான்றிதழ் வழக்கில் டெல்லி சட்டத் துறை முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர்  பதவியை இழந்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் மற்றொரு பெண் எம்.எல்.ஏ.வான பவனா கவுர் மீது போலி கல்வி சான்றிதழ் புகார் எழுந்துள்ளது.
 
சமரேந்திரா நாத் வர்மா என்பவர் டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. பவனா கவர் போலி கல்வி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக கூறியுள்ளார்.
 
அவர் தனது மனுவில் பெண் எம்.எல்.ஏ பவனா கவுர் கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது வேட்புமனுவில் தான் பிளஸ் 2 முடித்ததாக கல்வி சான்றிதழ் கொடுத்தார். ஆனால் 14 மாத இடைவெளியில் நடந்த 2015 ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்போது அவர் தனது வேட்புமனுவில் பி.ஏ மற்றும் பி.எட் படித்ததாக கூறியுள்ளார். பி.ஏ. படிக்க 3 ஆண்டுகளும், பி.எட் படிக்க 2 ஆண்டுகளும் என 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் அவர் 14 மாத காலத்திற்குள் கூடுதலாக 2 பட்டப்படிப்பு படித்தாக கூறி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனுவை விசாரித்த டெல்லி மெட்ரோ பாலிட்டன் நீதிமன்ற நீதிபதி பங்கஜ் சர்மா இந்த புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, வழக்கு விசாரணையை  25 ஆம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டார்.
 
தோமரின் கைது விவகாரம் அடங்குவதற்குள் பெண் எம்.எல்.ஏ பவனா கவுரின் விவகாரம் தலைதூக்கியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் ஏற்படுத்தியுள்ளது.