செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2016 (08:53 IST)

பாபா அணு ஆராய்ச்சி மையத்தை தகர்க்க திட்டமிடப்பட்டது: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தை தகர்க்க ஐஎஸ்ஐ உளவு அமைப்பு சதித்திட்டம் தீட்டியது என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி தனது 4 ஆம் நாள் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.


 

 
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 166 அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். 
 
இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த, லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அவர் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கில் அப்ரூவர் ஆகி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் வாக்குமூலம் அளித்து வருகிறார். அதன்படி, அவர் 4 ஆவது நாளாக வாக்குமூலம் அளித்தார்.
 
அப்போது, அவர் கூறியதாவது:-
 
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் இந்திய தாக்குதல் இலக்கில் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையமும் இருந்தது.
 
ஐஎஸ்ஐ அதிகாரி மேஜர் முகமது இக்பால் கேட்டுக்கொண்டதற்காக பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் பற்றிய தகவல்களை சேகரித்து அனுப்பினேன்.
 
அவர் அங்கு உளவு பார்ப்பதற்காக சில ஆட்களை நியமிக்கும்படியும் கூறினார். மும்பையில் சித்தி விநாயகர் கோவிலை வீடியோ எடுத்தேன்.
 
இந்து மதத்தை சேர்ந்தவர் போல் காட்டிக்கொண்டு கோவிலுக்கு நுழைவதற்காக மஞ்சள், சிவப்பு நிறத்தில் விற்கப்பட்ட புனித கயிற்றை வாங்கி கையில் கட்டிக்கொண்டேன்.
 
இப்படி 12 முறை புனித கயிற்றை வாங்கினேன். தாக்குதல் நடத்தும் 10 பேரும் இந்த கயிற்றை கட்டிக்கொண்டால் கோவிலுக்குள் சுலபமாக நுழைந்துவிடலாம் என்றும் யோசனை கூறினேன்.
 
மும்பையில் உள்ள யூதர்கள் மையமான சாபாத் இல்லத்தையும் வீடியோவாக எடுத்து அனுப்பி வைத்தேன். தாக்குதல் இலக்காக மும்பை கடற்படை விமான தளம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று முகமது இக்பால் என்னிடம் அதிருப்தி தெரிவித்தார்.
 
சித்திவிநாயகர் கோவிலிலும், கடற்படை விமான தளத்திலும் தாக்குதல் நடத்துவது சுலபம் அல்ல. அங்கு எந்த நேரமும் பலத்த பாதுகாப்பு அங்கு உள்ளது என்றும் அவரிடம் தெரிவித்தேன்.
 
மும்பை தாதரில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் ராஜராம் ரெகே என்பவரை சந்தித்தேன். மும்பையில் தாக்குதல் நடத்தும்போது சிவசேனா அலுவலகத்தையோ அல்லது அதன் தலைவரையோ இலக்காக கொள்வதற்கு அவரிடம் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள முயன்றேன். 
 
நான் தீவிரவாதி என்பது தெரியாததால் மும்பையில் இந்தியர்கள் அனைவரும் என்னுடன் நன்கு பழகினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.