வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (07:43 IST)

பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்த 10 ராணுவ வீரர்களுள் 4 பேர் தமிழர்கள்

பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்த 10 ராணுவ வீரர்களுள் 4 பேர் தமிழர்கள்

காஷ்மீரில் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிர் இழந்த 10 ராணுவ வீரர்களுன் 4 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.


 

 
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இமயமலையில் சியாச்சின் மலைமுகடு, கடல் மட்டத்திலிருந்த 19 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
 
இந்த சியாச்சின் மலைமுகடு பகுதியில் இந்திய ராணுவ தளம் உள்ளது. இது உலகின் மிகவும் உயரமான ராணுவ தளமாகும்.
 
இது மிகவும் உயரமான மலைப்பகுதி என்பதால் எப்போதும் குளிர் அதிகமாக இருப்பது வழக்கம். இந்த மலைப் பகுதி முழுவதும் பனிக்கட்டியாக உறைந்திருக்கும்.
 
எல்லைப்பகுதி என்பதால் ராணுவ வீரர்கள் விழிப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருவது வழக்கம். அங்கு தற்போது, மைனர் 40 டிகிரி குளிர் நிலவுகிறது.
 
இந்நிலையில், சியாச்சின் பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவச் சாவடி ஒன்றின் மீது கடந்த புதன் கிழமை திடீரென்று மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்தது.
 
இதனால், இந்த பனிப்பாறைக்கு அடியில் ராணுவச் சாவடி முழுவதுமாக புதையுண்டு போனது. இதில் அங்கிருந்த ஒரு இளநிலை ராணுவ அதிகாரியும், 9 வீரர்களும் உயிருடன் புதையுண்டனர். 
 
அவர்கள் அனைவரும் சென்னை பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது குறித்து தகவல் கிடைத்தும், அந்த இடத்திற்கு ராணுவம் மற்றும் விமானப்படையில் உள்ள சிறப்பு மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
அத்துடன், அதிநவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் ராணுவ குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
ஆனால், அங்கு நிலவும் தட்பவெப்பம் உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
 
இந்நிலையில், இந்த விபத்தில் இடிகபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி அவர்களுள் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
அவர்களின் பெயர் விவரம் வருமாறு:–
 
ஏழுமலை (ஹவில்தார்), வேலூர் மாவட்டம், துக்கம்பாறையைச் சேர்ந்தவர்.
கணேசன் (சிப்பாய்), மதுரை மாவட்டம், சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்தவர்.
ராமமூர்த்தி (சிப்பாய்), கிருஷ்ணகிரி மாவட்டம், குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்தவர்.
எஸ்.குமார் (லான்ஸ் ஹவில்தார்), தேனி மாவட்டம், குமணன்தொழுவைச் சேர்ந்தவர்.
 
அத்துடன், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், தேஜூரைச் சேர்ந்த லான்ஸ் நாயக் நாகேஷா, தார்வார் மாவட்டம், பேட்டாதூரைச் சேர்ந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா, மைசூர் மாவட்டம், எச்.டி.கோட்டேயைச் சேர்ந்த சிப்பாய் மகேஷா, கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம், மன்றோதுருத் என்ற இடத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் சுதீஸ், ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் பர்னபள்ளியைச் சேர்ந்த முஷ்டாக் அகமது, மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் மஸ்கர்வாடி கிராமத்தைச் சேர்ந்த சிப்பாய் சூர்யவன்சி ஆகியோரும் இந்த விபததல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.