வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2015 (12:51 IST)

ஏ.டி.எம்க்கு எடுத்துச் சென்ற ரூ.22 கோடியுடன் தலைமறைவான ஓட்டுனர்

டெல்லியில் ஏ.டி.எம்க்கு எடுத்துச் சென்ற ரூ.22 கோடியுடன் தலைமறைவான ஓட்டுனர் பணப் பெட்டியுடன் பிடிபட்டார்.


 

 
டெல்லி விகாஸ்புரி பகுதியில் தனியார் வங்கி ஒன்றின் தலைமை அலுவலகம் உள்ளது. அந்த வங்கியில் இருந்து ரூ.38 கோடி மதிப்புள்ள பணம் 4 வேன்களில் ஏற்றி டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
ஏடிஎம் எந்திரங்களில் வைப்பதற்காக அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டது. டெல்லியின் தென்கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்ட வேனில் ரூ.22 கோடி இருந்தது.
 
அந்த வேனை பிரதீப் சுக்லா என்பவர் ஓட்டிச் சென்றார். பாதுகாப்பு காரணங்களுக்காக வினய் படேல் என்பவர் துப்பாக்கி ஏந்தியபடி அந்த வானத்தில் சென்றார்.
 
அந்த வானம் கோவிந்தபுரி ரயில் நிலையம் அருகே சென்றபோது பாதுகாவலர் வினய் படேல் சிறுநீர் கழிப்பதற்காக வேனை விட்டு இறங்கினார்.
 
அவரை இறக்கிவிட்ட ஓட்டுநர் பிரதீப் சுக்லா, தான் அடுத்த தெருவில் காத்திருப்பதாக கூறினார். ஆனால் பாதுகாவலர் வினய் படேல் திரும்பி வந்து பார்த்தபோது அந்த வாகனம் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். இந்நிலையில், காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
 
அப்போது ஒரு இடத்தில் அந்த வேன் நிறுத்தப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஆனால் வேனில் பணம் இல்லை. இதனால், அந்த ரூ.22 கோடியை ஓட்டுனர் பிரதீப் சுக்லா எடுத்துக் கொண்டு தலைமறைவாகியது தெயவந்தது.
 
இந்நிலையில், ஓட்டுனர் பிரதீப் சுக்லாவை பிடிக்க, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அத்துடன் வேன் நிறுத்தப்பட்டிருந்த பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது.
 
இந்த சோதனையின் போது, அந்த பகுதியில் உள்ள பண்டகசாலை கிட்டங்கிற்குள் பிரதீப் சுக்லா பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த பணப்பெட்டிகள் மீட்கப்பட்டன. அந்த பணத்தை எண்ணிப்பார்த்தபோது, அதில் ரூ.22 கோடி இருந்தது.
 
அதில் 11 ஆயிரம் ரூபாய் குறைந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரைணையில், அந்தப் பணத்தை கொண்டு பிரதீப் சுக்லா புதிய ஆடைகள் வாங்கியதாக கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, அவரிடைம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.