செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (13:18 IST)

ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில் குறைபாடுகள்: உச்ச நீதிமன்றம் தகவல்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில் பல குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.


 

 
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
 
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அவர்கள் 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
இந்நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடந்த மே மாதம் 11 ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 
இந்த தீர்ப்பில் பல அடிப்படை தவறுகளும் கணித பிழைகளும் இருப்பதால் க‌ர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையிலான ச‌ட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஜெயலலிதாவுக்கு எதிரான‌ மேல்முறையீட்டு மனுவை தயாரித்தனர்.
 
இதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆதாரங்கள், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள், அரசு சான்று ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்தனர். மேலும் குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை யும், குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள பாதகமான அம்சங்களையும் குறிப்பிட்டிருந்தனர்.
 
இதையடுத்து 2,377 பக்கங்களைக் கொண்ட மேல்முறையீட்டு மனுவை கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் மற்றும் ஆச்சார்யாவின் உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் கடந்த ஜூன் 23 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் தாக்கல் செய்தனர்.
 
9 தொகுதிகளாக விவரிக் கப்பட்டுள்ள அந்த மேல்முறையீட்டு மனுவை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற பதிவுத்துறை, குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த 6 பேரை நியமித்தது.
 
இந்த சட்ட நிபுணர்கள் குழு கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆராய்ந்ததில் 10 முக்கிய குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மனுவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தலைமை பதிவாளரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.
 
எனவே மேல்முறையீட்டு மனுவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டார்.
 
அந்த மனுவில், “1,223 மற்றும் 1,453 ஆகிய 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது. இதேபோல 1,605 ஆம் பக்கத்தில் இருந்து 1,629 ஆம் பக்கம் வரை தாளின் மேற்பகுதியில் முறையாக பக்க எண் குறிப்பிடப்படவில்லை.
 
மனுவை விசாரணைக்கு ஏற்கும் வகையில் அசல் பிரமாணப் பத்திரத்தை இணைக்கவில்லை. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை மற்றும் ரத்து செய்யக்கோரும் முக்கிய வேண்டுகோளில் ஆணை வெளியான தேதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நீதிபதி குன்ஹா மற்றும் குமாரசாமி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய அரசு சான்று ஆவணங்களை மனுவில் இணைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
 
இந்த வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு, மனு மீதான தீர்ப்பாணைகள், விசாரணை நீதிமன்றத்தின் முக்கிய‌ குறிப்புகள், வெளியிடப்பட்ட‌ அரசாணைகள், பின் இணைப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவை இணைக்கப்படவில்லை.
 
குறிப்பாக 28-4-2015 அன்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டது தொடர்பான கர்நாடக அரசின் அரசாணை தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக மேல்முறையீட்டு மனு தயாரிக்கப்பட்ட தேதி, தாக்கல் செய்யப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை” என்று உச்ச நீதிமன்றம் குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, இந்த மனு தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய சந்தேஷ் சவுட்டா, கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா ஆகியோரிடம் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இந்நிலையில், ஆச்சார்யா தலைமையிலான குழு இந்த மேல் முறையீட்டு மனுவை திருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.