வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (11:18 IST)

கெஜ்ரிவால் மே 24 ஆம் தேதி ஆஜராகாவிட்டால் நடவடிக்கை - டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை

அவதூறு வழக்கில் மே 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை எச்சரித்துள்ளது.

மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகன் அமித் சிபல் தனது தந்தையின் அமைச்சர் பதவியை பயன்படுத்தி ஆதாயமடைந்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மணிஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷன், சாஷியா இல்மி ஆகியோர் கடந்த ஆண்டு புகார் கூறியிருந்தனர்.
 
இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி அமித் சிபல் டெல்லி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவாலும், சிசோடியாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் அப்போது நீதிபதி தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்தார். 
 
மேலும் வழக்கு விசாரணை நடைபெறும் நாட்களில் குற்றம்சாற்றப்பட்ட அனைவரும் தவறாமல் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். எனினும் கெஜ்ரிவாலும், சிசோடியாவும் அன்றாட விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று டெல்லி பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் குமார் சர்மா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எனினும், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆஜராகவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
இதனால் நீதிபதி அடுத்த கட்ட விசாரணையின்போது இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட அனைவரும் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். இல்லையென்றால், அவர்கள் கட்டாயம் ஆஜராகும்படியான நடவடிக்கையை நீதிமன்றம் எடுக்கும் என்று கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் ராகுல் மெஹ்ராவை எச்சரித்து வழக்கின் விசாரணையை மே மாதம் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
 
மேலும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகாமல் இருப்பதற்காக தங்களது வழக்கறிஞர் மூலம் மனு செய்த சிசோடியா, பிரசாந்த் பூஷன், சாஷியா இல்மி மூவருக்கும் தலா 2,500 ரூபாய் அபராதத்தை நீதிபதி விதித்தார்.
 
அதே நேரம், தேர்தலில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால், தான் நேற்று ஒரு நாள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்காக சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனால் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.