1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 19 நவம்பர் 2016 (12:00 IST)

நல்லது ; ஆனால் நல்லதல்ல - ரூபாய் நோட்டு அறிவிப்பு பற்றி அன்னா ஹசாரே கருத்து

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பாராட்டியுள்ளார்.


 

 
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். 
 
இந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர். 
 
பாராளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரில், காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகள், மத்திய அரசின் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு துணிச்சலானது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “மத்திய அரசின் இந்த நடவடிக்கை புரட்சிகரமானது. கண்டிப்பாக இதன் மூலம் கருப்புப் பணம் ஒழியும். இதன் மூலம், ஊழல் மற்றும் பயங்கரவாதிகளின் நிதி கட்டுப்படுத்தப்படும். 
 
கருப்புப் பணத்தை ஒழிப்பதில், முந்தைய காங்கிரஸ் அரசு ஆர்வம் காட்டவில்லை. சற்று தாமதமானலும், மோடி அரசு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.  இது நீண்ட நாட்களுக்கு பலன் அளிக்கும்.
 
ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது நல்லதல்ல. இதன் மூலம் மீண்டும் கருப்புப் பணம் அதிகரிக்கும்” என அவர் கருத்து தெரிவித்தார்.
 
மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க அரசு தவறிவிட்டதாக, கடுமையாக விமர்சனம் செய்து வந்த அன்னா ஹசரே, தற்போது மோடி அரசை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.