1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 2 மே 2015 (17:03 IST)

தமிழர்கள் சுட்டுக் கொலை - ஆந்திர அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை செம்மரம் கடத்தியதாக கூறி, அம்மாநில வனத்துறை போலீசார் சுட்டுக்கொலை செய்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆந்திர மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

 
திருப்பதி அருகே உள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை, ஆந்திர வனத்துறை போலீசார் கடந்த மாதம் 7 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்தனர்.
 
இந்த படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, உயிரிழந்த தொழிலாளர்களில் ஒருவரான சசிகுமார் என்பவரின் மனைவி முனியம்மாள், ஆந்திர மனித உரிமைக் குழு சார்பில் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி.சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ரகுநாத், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு காவல்துறை ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார் தலைமை வகிக்கிறார். அவர் குண்டூரில் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த போது பல என்கவுண்ட்டர்களை நடத்தியுள்ளார்.
 
அதே போன்று, விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்றொரு அதிகாரியான சந்திரகிரி காவல் நிலைய அதிகாரி சந்திரசேகரும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர். இவர்கள் அங்கம் வகிக்கும் இந்த விசாரணைக் குழு மூலம் நியாயம் கிடைக்காது. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டார்.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட இரு காவல்துறை அதிகாரிகளும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,  சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவுக்கான பதிலை ஆந்திர அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
 
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை கோடை விடுமுறைக்குப் பின்பு  ஒத்திவைத்தனர்.