1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (10:11 IST)

நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு அல்கொய்தா மிரட்டல் வீடியோ: விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

அல்கொய்தா தீவிரவாதிகள் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு, வீடியோ மூலம் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் அல்-ஜவாரியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் இந்தியாவில் செயல்படுவதற்காக ஆசிம் உமர் தலைமையில் தனி பிரிவு ஒன்றை அல்கொய்தா ஏற்கனவே தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், ஆசிம் உமர், "பிரான்சில் இருந்து வங்காளதேசம் வரை தாக்குதல்கள் ஓயப்போவது இல்லை" என்ற பெயரில் 9 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "யுடியூப்" இணையதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த வீடியோவில், அல்கொய்தா தீவிரவாத இயக்கம் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நரேந்திர மோடியின்பேச்சுகள் அமைந்து இருப்பதாக அந்த வீடியோவில் ஆசிம் உமர் பேசியுள்ளார். 
 
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கொள்கைகள், ஆளில்லா விமான தாக்குதல், ஐ.நா. சபையின் செயல்பாடுகள், சார்லி ஹெப்டோ பத்திரிகையின் எழுத்துகள் போன்றவை முஸ்லிம் களுக்கு எதிராக அமைந்திருப்பதாகவும் அந்த வீடியோ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கும் வகையில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதனால் அவருக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
 
அத்துடன், கடந்த காலத்தில் பிரான்ஸ், டென்மார்க், பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட சில தாக்குதல்களை குறிப்பிட்டு, அவற்றுக்கு அல்கொய்தா பொறுப்பு ஏற்பதாகவும் அந்த வீடியோவில் ஆசிம் உமர் தெரிவித்துள்ளார்.
 
ஒசாமா பின்லேடனின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், அல் ஜவாரியின் கட்டளையை ஏற்று இயக்கத்தின் பல்வேறு பிரிவுகள் இந்த தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்க குடியுரிமை பெற்ற வலைத்தள எழுத்தாளரான அவிஜித் ராய் என்பவர் 2 தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு அல்கொய்தா பொறுப்பு ஏற்பதாக அந்த வீடியோவில் ஆசிம் உமர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு அல்கொய்தா இயக்கம் விடுத்துள்ள மிரட்டல் மத்திய அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.