செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 4 பிப்ரவரி 2017 (12:03 IST)

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் வரம்பை மீறியுள்ளதா?

சிபிஐ நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறியுள்ளது என்று வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


 

மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளில் மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி வியாழனன்று விடுவித்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் திடீரென விடுவிக்கப்பட்டது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதையடுத்து, சிபிஐ நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அமலாக்கத் துறையின் மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு, விசாரணையை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்வதற்கு முன்னதாக, 2ஜி ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தனியாக ஒரு மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில், மாறன் சகோதரர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

‘குற்ற நடைமுறைச் சட்டம் ‘437ஏ’ பிரிவின் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் 6 மாதகால பிணைப் பத்திரத்திற்கு மனு செய்திருக்க வேண்டும்; இது சிபிஐ நீதிமன்றத்தால் வலியுறுத்தப்படவில்லை.

அதேபோல முடக்கப்பட்ட சொத்துகளையும் திருப்பி அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; இது சிறப்பு நீதிமன்றத்தின் சட்ட எல்லையை தாண்டிய ஒன்றாகும்’ என்று ஆனந்த் குரோவர் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு, ‘ஏன் தனி நபராக இதனை எதிர்த்து மனு செய்கிறீர்கள்?’ என குரோவரிடம் கேட்டனர். அதற்கு ‘இது என்னுடைய கடமை’ என்று குரோவர் பதிலளித்தார்.