வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2014 (12:49 IST)

அப்சல் குருவின் மரண தண்டனை உத்தரவின் நகலை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

அப்சல் குருவின் மரண தண்டனை உத்தரவு நகலை தகவல் அறியும் உரிமைச் சட்த்தின் கீழ் வெளியிட வேண்டும் திகார் சிறை நிர்வாகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், செய்யப்பட்ட அப்சல் குரு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூக்கிலிடப்பட்டார்.
 
அப்சல் குருவின் மரண தண்டனை தொடர்பான நகல், தூக்கிலிடப்பட்ட விடியோ பதிவு, தண்டனை தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட கடிதத்தின் நகல் ஆகியவற்றைத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பரஸ்நாத் சிங் என்பவர் கேட்டிருந்தார்.
 
ஆனால், அந்த விவரங்களை அளிக்க திகார் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. அவற்றை வெளியிடுவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து, மத்திய தகவல் ஆணையத்திடம் பரஸ்நாத் சிங் மேல்முறையீடு செய்தார்.
 
இதைத் தொடர்ந்து மத்திய தகவல் ஆணையர் எம்.ஸ்ரீதர் ஆச்சாரியலு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, “அப்சல் குருவின் மரண தண்டனை உத்தரவு தொடர்பான நகல்களை திகார் சிறை நிர்வாகத்தினர் வழங்க மறுத்தது சரியல்ல. மரண தண்டனை விவரங்களை வெளியிடுவதற்கும், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
 
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட விடியோ பதிவையும், அவரை தூக்கிலிட்ட அதிகாரியின் பெயரையும் வெளியிட வேண்டாம். ஆனால், தூக்கிலிடப்பட்டது விடியோ பதிவு செய்யப்பட்டதா என்பதை சிறை நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.
 
மனுதாரர் கோரியிருந்த தண்டனை உத்தரவு நகல் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும்“ என்று அவர் உத்தரவிட்டார்.