வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2015 (16:24 IST)

உ.பி. விவசாயிகளுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் அளிப்பு

பருவநிலையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநில விவசாயிகளுக்கு உதவ அம்மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் முன் வந்துள்ளனர்.
 

 
இது குறித்து உ.பி. மாநில சட்டப்பேரவையின் பாஜக தலைவரான சுரேஷ்குமார் கண்ணா, கடந்த செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு தம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 41 பேரும் தம் ஒரு மாத சம்பளத்தை உ.பி. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் என அறிவித்தார்.
 
அதன்படி, பாஜகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் தம் ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் நிவாரண நிதியில் இன்று ஒப்படைத்தனர்.
 
உ.பி.யில் மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் 65-ல் சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
 
இதனால், அதன் சுமார் 200 விவசாயிகள் பல்வேறு கிராமங்களில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி கடந்த வாரம் தம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் உ.பி. மாநில எம்.எல்.ஏக்கள் அனைவரையும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்க உத்தரவிட்டிருந்தார். இதை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அன்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாகப் பிரித்தளிக்கும்படியும் கூறியிருந்தார்.