வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 13 நவம்பர் 2014 (16:38 IST)

கொச்சியை அடுத்து, கோழிக்கோடு தெருக்களில் முத்தப் போராட்டம்

கலாச்சாரப் பாதுகாவலர்களின் அடக்குமுறையையும் வன்முறையையும் எதிர்த்து, கொச்சியை அடுத்து, கோழிக்கோடு தெருக்களில் முத்தப் போராட்டம் நடக்க உள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி, இச் இச் என முத்தத்தால் யுத்தம் நடத்துவதற்கு கிஸ் ஆஃப் லவ் (Kiss Of Love) அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
 
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த ஆடல் பாடல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களும் இளம்பெண்களும் அத்துமீறிய செயலில் ஈடுபட்டதாகக் கூறி பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவை சேர்ந்தவர்கள் அந்த விடுதிக்குள் புகுந்து சூறையாடினார்கள்.
 
இதைக் கண்டித்து 'கிஸ் ஆப் லவ்' என்ற அமைப்பு, ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்டது. இதற்கு இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பினர் பொது இடத்தில் கூடி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தப் போவதாக அறிவித்தனர்.

 
அதன்படி நவம்பர் 2ஆம் தேதி கொச்சி மரைன் டிரைவ் மைதானத்தில் திரண்ட முத்தப் போராட்டக்காரர்கள், சாலை நடுவே நின்றபடி முத்தமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துச் சில அமைப்பினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டு காவல் துறையினரின் தடியடியில் முடிந்தது. 
 
கொச்சியில் நடந்த முத்தப் போராட்டம் நாடு முழுவதிலும் இருந்து மாணவ - மாணவிகளிடம் ஆதரவைப் பெற்றது. டெல்லி, ஐதராபாத், கொல்கத்தாவிலும் மாணவ, மாணவிகள் முத்தப் போராட்டம் நடத்தினார்கள்.

 
இந்த நிலையில் ’கிஸ் ஆப் லவ்’ அமைப்பினர் தங்கள் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அடுத்த கட்ட போராட்டத்திற்கு ’கிஸ் ஆப் தி ஸ்ட்ரீட்’ என்று புதிய பெயரிட்டுள்ளனர். இந்த முறை 2014 டிசம்பர் 7ஆம் தேதி கோழிக்கோட்டில் முத்தப் போராட்டம் நடைபெறும் என்று இந்த அமைப்பினர் ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளனர்.
 
கடந்த முறை கொச்சியில் நடந்த போராட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடைபெற்றது. ஆனால் இந்த முறை கோழிக்கோடு நகரையே ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் தங்கள் போராட்டத்தை அரங்கேற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கோழிக்கோடு நகரின் தெருக்கள்தோறும் திரண்டு நின்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். 
 
இந்தப் போராட்டம் இந்தியா முழுவதையும், கடவுளின் சொந்த நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.