வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (16:55 IST)

டெல்லி பாலியல் பலாத்கார குற்றவாளியை பேட்டி எடுக்க அனுமதித்தது ஏன்?: அதிகாரியிடம் விளக்கம் கேட்ட ராஜ்நாத் சிங்

டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியிடம் பிரிட்டன் இயக்குநர் பேட்டி எடுத்த  விவகாரத்தில் அதிருப்தி அடைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறை அதிகாரியிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.
 
சிறைக்காவலில் உள்ள குற்றவாளியிடம் பேட்டி எடுக்கப்பட்ட விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டுள்ள ராஜ்நாத் சிங், திகார் சிறையின் டைரக்டர் ஜெனரல் அலோக் குமார் வர்மாவிடம் உடனடியாக இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
 
ராஜ்நாத் சிங், சிறை டைரக்டரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அலோக் குமார் வர்மா சம்பவம் தொடர்பாகவும், இதுதொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் விரிவாக ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைத்துள்ளார்.
 
பிரிட்டன் இயக்குநர் லிஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி. செய்தியாளர் ஆகியோர் குற்றவாளி முகேஷ் சிங்கை பேட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
 
இச்சம்பவத்தில் உயிருக்கு போராடிய மாணவி சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார். இந்தவழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் முகேஷ் சிங். பேட்டி அளித்துள்ள முகேஷ் சிங், பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு ஆண்களை விட பெண்களுக்கே அதிக பொறுப்பு என்று கூறியுள்ளார்.