வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 மே 2015 (13:17 IST)

நடிகர் சல்மான் கான் குற்றவாளி : மும்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மது அருந்தி கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய வழக்கில், நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 


 

 
கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடிகர் சல்மான் கான், மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மது போதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தினார். 
 
நடிகர் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், சாலையோரம் தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 
 
முதலில், இந்த வழக்கை விசாரித்த மும்பை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பின்பு  விசாரணையை செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டது. அதன்படி, செசன்சு நீதிமன்றத்தில் மறுவிசாரணை தொடங்கியது
 
 
இந்த வழக்கில், காயம் அடைந்த கலிம் முகமது பதான், முன்னா மலாய் கான், அப்துல்லா ராப் சேக், முஸ்லிம் சேக் , சல்மான் கானின் போலீஸ் மெய்க்காவலர் ரவீந்திர பாட்டீல் மற்றும் பலர் சல்மான் கானுக்கு எதிராக நீதி மன்றத்தில் நேரில் சாட்சி அளித்தனர்.
 
ஆனால், இந்த விபத்தின் போது நான் மது அருந்தி, காரை செலுத்திவில்லை என்றும், தனது டிரைவர் அசோக் சிங் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் என நடிகர் சல்மான் கான் வாக்குமூலம் அளித்தார். இதையே அவரது டிரைவர் அசோக் சிங்ம்  நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 
 
கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடை பெற்ற இந்த வழக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதியுடன் விசாரணை முடிவுக்கு வந்தது. 
 
இதையடுத்து, மே 6 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதாக நீதிபதி அறிவித்தார்.  மேலும், அன்றைய தினம் சரியாக காலை 11.15 மணிக்கு நடிகர் சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதனால், இன்று காலை முதலே மும்பை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும், மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான் கான் மிகவும் பதட்டத்தோடு ஆஜரானார்.  
 
கார் விபத்தின் போது, நடிகர் சல்மான்கான் மது போதையில் இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 
 
இதனால், சல்மான் கானுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றத்தில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
நடிகர் சல்மான் கான் தீர்ப்பு குறித்து, காலை முதலே பாலிவுட் உலகம் மிகவும் அர்வமாக எதிர்பார்த்து காத்து இருந்து. ஆனால், நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதால் பாலிவுட் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.