வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (18:16 IST)

நடிகர் சீரஞ்சீவி விமான நிலையத்தில் கைது: ஆந்திராவில் பரபரப்பு

ராஜமுந்திரி விமான நிலையத்தில் நடிகர் சிரஞ்சீவியை கைது செய்த போலீசாருக்கு எதிராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரசாரும், சிரஞ்சீவியின் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 

 
ஆந்திராவில் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி காபு சமூக தலைவர் பத்மநாபம் சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
 
கிழக்கு கோதாவரி மாவட்டம் 'துனி' அருகே உள்ள கிரிலம்புடியில் உள்ள தனது வீட்டில் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
 
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் காபு சமூக மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 அத்துடன் இந்த போராட்டம் பிற மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இட ஒதுக்கீடுக்காக ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சில இடங்களில் இளைஞர்கள் செல்போன் கோபுரங்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், 4 ஆவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டம் காரணமாக, பத்மநாபத்துடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்த மனைவி பத்மாவதி படுக்கையில் விழுந்துள்ளார்.
 
தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அவர்கள் இருவரும் மறுத்து வருவதால், கிரிலம்புடி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
 
இதனால், பத்மநாபம் வீட்டை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய படை காவல்துறையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
அங்கு, அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்க பத்மநாபத்தை சந்திக்க யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
 
இந்நிலையில், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பத்மநாபத்தை சந்திப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யும், நடிகருமான சிரஞ்சீவி கிரிலம்புடிக்கு வருவதாக அறிவித்திருந்தார்.
 
அவரை சந்திக்கும் சிரஞ்சீவியும் அதே காபு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேட்டியளிப்பார் என்பதால் ஏராளமான செய்தியாளர்கள் பத்மநாபம் போராட்டம் நடத்தும் இடத்தின் அருகே குவிந்தனர்.
 
ஆனால், சிரஞ்சீவியையும், அவருடன் வந்த காங்கிரஸ் தலைவர்களையும் ஆனால், ராஜமுந்திரி விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர்.