சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி விலகல் - புதிய பதவியை ஏற்க மறுப்பு

Last Updated: வெள்ளி, 11 ஜனவரி 2019 (16:42 IST)
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்மட்டக் குழு தம்மை நீக்கிய மறுநாளான இன்று, அலோக் வர்மா தனது புதிய பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.
 
அவர் தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று நியமனங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று, வியாழக்கிழமை, தெரிவித்திருந்தது. இந்த மாத இறுதியில் அவரது சிபிஐ இயக்குநர் பதவிக்காலம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை செயலருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இந்தியக் காவல் பணியில் (ஐ.பி.எஸ்) இருந்து அவர் ஜூலை 31, 2017 அன்றே ஓய்வு பெற்று விட்டதால், பணி ஓய்வு வயதை அடைந்துள்ள தாம் புதிய பொறுப்பை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் முன்னர் தம்மிடம் விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை என்றும், தமக்கு இயற்கை நீதி வழங்கப்படவில்லை என்றும் அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
 
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மூலம் சிபிஐ அமைப்பை எப்படி நடத்தும் என்பதற்கு நேற்று எடுக்கப்பட்ட முடிவு ஒரு சான்று என்றும், இது கூட்டாக சுயபரிசோதனை செய்வதற்கான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அலோக் வர்மா நீக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் கட்சி, தன் மீதான விசாரணைக்கு அஞ்சியே பிரதமரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
 
முன்னதாக இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் மூத்த பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகள் இடையே உண்டான அதிகாரப் போட்டியால், அதன் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருமே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தனர்.
 
முக்கியமான வழக்குகளை விசாரிக்கும்போது, தன்னைவிட இளநிலையில் உள்ள அதிகாரியான இயக்குநர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றார் என்ற புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதாகக் கூறி வர்மா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
 
மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக்கி உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 8ஆம் தேதி தீர்ப்பளித்தது.
 
அலோக் வர்மா தற்போது அலுவலகம் சென்று பணியில் ஈடுபடலாம். ஆனால், தற்போதைக்கு மிகப்பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது. சிபிஐ இயக்குநரை மாற்றுவதோ, அவரை பணியில் ஈடுபடாமல் முடக்கி வைப்பதோ தேர்நதெடுக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக அரசு முடிவெடுக்க சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது.
 
பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழு அவரைப் பதவியில் இருந்து நீக்க இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வியாழன்று வாக்களித்தது.
 
மல்லிகார்ஜுன கார்கே அலோக் வர்மாவை அவரது பதவியில் இருந்து நீக்க எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :