வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (12:04 IST)

மன்மோகன் சிங் மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை: வினோத் ராய்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது எனக்கு எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை என்று முன்னாள் தணிக்கை துறை அதிகாரி வினோத் ராய் கூறியுள்ளார்.
 
தொலைத் தொடர்பு துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
 
இதேபோல், பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் நிலக்கரி இலாகா பொறுப்பையும் கவனித்த போது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்த குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.
 
இந்த ஊழல்களை அம்பலப்படுத்திய முன்னாள் மத்திய கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், தான் எழுதிய புத்தகத்தில் பல்வேறு பிரச்சனைகள் பற்றி எழுதி உள்ளார். மேலும், 2008 முதல் 2013 வரை மன்மோகன் சிங் ஆட்சியில் நடைபெற்ற 2ஜி மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்சனைகள் தொடர்பாகவும் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில், இது குறித்து வினோத் ராய் கூறும்போது, ''பிரதமர் தான் அரசாங்கத்தின் தலைவர். அவருக்கு சில முடிவுகள் எடுப்பதில் நேரடியாக பங்கு இல்லமல் இருக்கலாம். காமென்வெல்த் விளையாட்டு போன்றவற்றில் அவருக்கு நேரடி பொறுப்பு எதுவும் இல்லை. சில முறைகேடுகள் அவரது கவனத்திற்கு கொண்டுவரபட்ட பின்பும் தவறுகள் நடைபெற்றுள்ளன.
 
ஒரு அரசின் பாராட்டையும் குற்றத்தையும் அதன் தலைவர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தவகையில் அதை நான் வெளியே கொண்டு வந்தேன். அவர் மீது எனக்கு எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. நமது கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றது. அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக விளையாடியது. அந்த குற்றச்சாற்று கேப்டன் மீது வரவில்லையா? அந்த போட்டிகளில் பல வீரர்கள் சரியாக விளையாடவில்லை. அந்த குற்றசாற்றை கேப்டன் ஏற்று கொண்டார்" என்றார்.