வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (15:19 IST)

சிவசேனாவுக்கு ஓட்டு போடாத பெண் உயிருடன் தீ வைத்து எரிப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் தேசியவாத காங்கிரசுக்கு வாக்களித்த 65 வயது பெண் தீ வைத்து எரிக்கப்பட்டார்.
 
மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு கடந்த 15 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாசிக்கில் இருந்து 85 கி.மீ. தொலைவில் இயோலா அருகே உள்ளது பாபுல் கவுன். தேர்தல் அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஜெலுபாய் வாபலே (65) என்ற பெண் வாக்களிக்க சென்று கொண்டிருந்தார். இவரது தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) வேட்பாளர் சாகன் புஜ்பால் வாட்ச் சின்னத்தில் போட்டியிடுகிறார். சிவசேனா வேட்பாளர் சாம்பாஜி பவார் வில்-அம்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் 2வது பட்டனில் என்சிபி வேட்பாளரும், 3வது பட்டனில் சிவசேனா வேட்பாளரும் இடம் பெற்றிருந்தனர். வாக்களிக்க சென்ற ஜெலுபாயை 3 பேர் வழிமறித்து 3வது பட்டனை அழுத்த சொல்லியுள்ளனர். வாக்களித்து விட்டு திரும்பிய அவரிடம் மீண்டும் எதற்கு வாக்களித்தாய் என்று கேட்டனர். அவர் இரண்டாம் பட்டனில் உள்ள வாட்ச் சின்னத்தில் வாக்களித்தேன் என்றார்.
 
உடனே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அந்த கும்பல் சென்று விட்டது. இந்நிலையில் மறுநாள் வியாழன் அன்று இரவு 8 மணிக்கு அசோக் போர்நார்(38), புராக்(40), பாம்துராங் போர்நார்(45) ஆகியோர் வந்து ஏன் 3வது பட்டனை அழுத்தவில்லை என ஜெலுபாயுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அசோக் தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஜெலுபாய் மீது ஊற்றினார். பின்னர் அந்த கும்பல் அவர் மீது தீ வைத்து விட்டு தப்பியது. தீயில் எரிந்து படுகாயமடைந்த ஜெலுபாய் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெலுபாய் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.